அரசு பஸ்களில் பயணிகளை குழப்பும் டிஜிட்டல் பெயர் பலகைகள்
அரசு பஸ்களில் பயணிகளை குழப்பும் டிஜிட்டல் பெயர் பலகைகள்
ADDED : ஆக 13, 2026 11:55 PM

காரியாபட்டி: அரசு பஸ்களில், டிஜிட்டல் ஊர் பெயர் பலகைகள் சரியாக மாற்றப்படாமல் இயக்கப்படுவதால் பயணிகள் குழப்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
காரியாபட்டிக்கு விருதுநகர், அருப்புக்கோட்டை, மதுரை டெப்போ பஸ்கள் இயக்கப்படுகின்றன. முன் பலகையில் ஊர் பெயர் இருக்கும். பயணிகள் எளிதில் கண்டறிந்து அந்தந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இருந்தது. தற்போது பலகைகளுக்குப் பதிலாக, வழித்தட எண், செல்லும் இடம் தெளிவாகத் தெரியும் வகையில் நவீன டிஜிட்டல் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டன.
சமீபகாலமாக பஸ்கள் ஒரு வழித்தடத்திலிருந்து மற்றொரு வழித்தடத்திற்கு மாற்றப்படும் போதோ, திரும்பும் பயணத்தின்போதோ டிஜிட்டல் போர்டில் உள்ள ஊர்ப் பெயர்களைப் பணியாளர்கள் சரியாக மாற்றுவதில்லை. டிஜிட்டல் போர்டில் இருக்கும் இடத்தைப் பார்த்து பஸ்சில் ஏறும் பயணிகள், அது வேறு வழித்தடத்திற்குச் செல்வதை அறிந்து வழியிலேயே இறங்கும் நிலை ஏற்படுகிறது.
ுறிப்பாக இரவு நேரங்களில் தூரத்திலிருந்து வரும் பஸ்களின் செல்லுமிடத்தை தவறான போர்டு காரணமாக அடையாளம் காண முடியாமல் முதியோர்கள், வெளியூர் பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நவீன வசதிகளைக் கொண்டு வருவது வரவேற்புக்குரியதுதான். அதைச் சரியாகப் பராமரித்து இயக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒவ்வொரு முறையும் பஸ் புறப்படும்போதும் டிஜிட்டல் போர்டில் சரியான ஊர் பெயர் மாற்றப்பட்டுள்ளதா என்பதை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும். நேற்று காரியாபட்டிக்கு வந்த விருதுநகர் டவுன் பஸ்சில் சிவகாசி என இருந்ததால் பயணிகள் குழம்பினர். அது போன்று தவறு நடக்காமல் முறையாக கவனித்து, ஊர் பெயரை மாற்ற ஊழியர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.
