/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை உரிமம் ரத்தில் பாரபட்சம்
/
பட்டாசு ஆலை உரிமம் ரத்தில் பாரபட்சம்
ADDED : ஏப் 02, 2025 05:37 AM

சிவகாசி : வெம்பக்கோட்டை பகுதியில் 30 பட்டாசு ஆலைகளுக்கு தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சிவகாசியில் உள்ள தொழிலக பாதுகாப்பு சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்வதற்காக தொழிலக பாதுகாப்பு ,சுகாதாரம் ,போலீசார், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை அடங்கிய ஆறு குழுக்கள் செயல் படுகின்றது. இக்குழு ஆய்வு செய்து விதி மீறி இயங்கும் பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்கின்றது.
வெம்பக்கோட்டை பகுதியில் நாக்பூர், டி.ஆர்.ஓ., சென்னை உரிமம் பெற்ற 200 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கடந்த நான்கு மாதங்களில் பட்டாசு ஆய்வு குழுவினர் இப்பகுதியில் விதிமீறி இயங்கியதாக 30 ஆலைகளின் தற்காலிக உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்து அதன்படி உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் வெம்பக்கோட்டையில் செயல்படும் தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ஆய்வுக் குழுவினர் ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர் என கூறி மதியம் 1:30 மணியளவில் சிவகாசியில் உள்ள தொழிலக பாதுகாப்பு , சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ரகுராமன் எம்.எல்.ஏ., தமிழன் பட்டாசு உரிமையாளர்கள், ஒரு தலைப்பட்சமாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகள் நான்கு மாதமாக செயல்படவில்லை. மீண்டும் இயங்குவதற்கு கால அவகாசம் குறித்து தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குனர் ராஜ்குமாரிடம் தெரிவித்தனர். இணை இயக்குனர் அவர்களிடம் மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். தொடர்ந்து பட்டாசு உரிமையாளர்கள் கலைந்து சென்றனர்.
தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் செயலாளர் மணிகண்டன் கூறுகையில், வெம்பக்கோட்டை பகுதியில் ஆய்வு செய்யும் குழுவினர் ஒருதலைப் பட்சமாக செயல்படுகின்றனர். டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படுகிறது. ஒரு சில ஆலைகளில் அதிக ஆட்களை வைத்து விதிமீறி பட்டாசு தயாரிக்கப்படுகிறது.
இதனை ஆய்வு குழுவினர் கண்டு கொள்வதில்லை. ஆனால் சிறிய விதிமீறல் இருந்தாலும் ஒருதலை பட்சமாக மற்ற பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் குழுவினர் தற்காலிகமாக உரிமத்தை ரத்து செய்கின்றனர். உரிமம் ரத்து செய்யப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் மீண்டும் பட்டாசு ஆலையை திறப்பதற்கு வழி இல்லை, என்றார்.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் ராஜ்குமார் கூறுகையில், பட்டாசு ஆய்வு குழுவினர் பாரபட்சமாக நடப்பதில்லை. விதி மீறி எந்த பட்டாசு ஆலை இயங்கினாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது, என்றார்.

