மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் விவசாயம், தீப்பெட்டி, பட்டாசு, அச்சு தொழிலாளர்கள் உட்பட பல்வேறு கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வரும் நிலையில் தங்களது வார விடுமுறை நாட்களில் மலையடிவார கோயில்கள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் சென்று வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை மழை பெய்தால் மட்டுமே நீர்வீழ்ச்சிகள், ஓடைகளில் நீர் வரத்து காணப்படும் என்பதால் குற்றாலம், பாபநாசம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற நகரங்களுக்கு நமது மாவட்ட மக்கள் அதிகளவில் சுற்றுலா சென்று வருகின்றனர்.
மழை பெய்து தண்ணீர் வந்தால் மட்டுமே ராஜபாளையம் தாலுகாவில் சாஸ்தா கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத் தோப்பு பேச்சி அம்மன், ராக்காச்சி அம்மன் கோயில்கள், வத்திராயிருப்பு தாலுகாவில் பிளவக்கல் பெரியாறு அணை, சதுரகிரி தாணிப்பாறை போன்ற மலையடிவார இடங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகின்றனர்.
பல்வேறு சமூக வலைத்தளங்கள் மூலமாக விருதுநகர் மாவட்ட சுற்றுலா தலங்களை அறிந்து கொள்ளும் வெளி மாவட்ட மக்களும் தற்போது அதிகளவில் வர துவங்கியுள்ளனர். இதற்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஒரு உதாரணமாகும்.
இவ்வாறு பல்வேறு வெளிமாவட்டங்களில் இருந்து விருதுநகர் மாவட்ட மலையடி வார சுற்றுலா தலங்களுக்கு வரும் மக்களுக்கு போதிய அளவிற்கு அடிப்படை சுகாதார வசதிகள், ஓய்வறைகள், ஓட்டல்கள், பஸ் வசதிகள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இத்தகைய சிரமத்திற்கு மத்தியில் சுற்றுலா வந்தவர்கள் திடீர் கனமழையால் பாதிக்கப்படுகின்றனர்.
சாஸ்தா கோயில், செண்பகத் தோப்பு, பிளவக்கல் பெரியாறு அணை, தாணிப்பாறை பகுதிகளுக்கு தினமும் இரண்டு முறை மட்டும் தான் அரசு பஸ்கள் உள்ளது. இத்தகைய இடங்களில் சுற்றுலா வரும் மக்கள் காத்திருக்க நிழற்குடையோ, காத்திருப்பு அறையோ இல்லை. நவீன சுகாதார வளாகங்கள் இல்லை, தரமான ஓட்டல்கள் இல்லை.
பிளவக்கல் பெரியாறு அணையில் பல ஆண்டுகளாக பூங்கா பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. நான்கு ஆண்டுகளாக மக்கள் அனுமதிக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் பிளவக்கல் பெரியாறு அணை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
இத்தகைய குறைகளை சரி செய்து போதிய அளவிற்கு பஸ் வசதியும், அடிப்படை வசதிகளும் செய்திருந்தால் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை மென்மேலும் வளரும். ஒவ்வொரு தாலுகாவிலும் வியாபாரங்கள் அதிகரிக்கும். வருவாய் அதிகரித்து ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள்.
எனவே, விருதுநகர் மாவட்டத்தில் மலையடிவார சுற்றுலா தலங்களில் போதிய அளவிற்கு அடிப்படை வசதிகள் செய்து தந்து சுற்றுலாவை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.