ADDED : ஜன 22, 2026 06:00 AM

விருதுநகர்: விருதுநகரில் ஒரே நாளில் 35 தெரு நாய்களுக்கு கால்நடைத்துறையினர் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.
விருதுநகரில் சில நாட்களுக்கு முன்வெறி நாய் ஒன்று ஒரே நாளில் 14 பேரை கடித்துக் குதறியது. இதில் 74 வயதான மூதாட்டி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில்தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்த நகராட்சி கமிஷனர் விஜயகுமார் உத்தரவிட்டார். அதன் பேரில் கால்நடைத்துறை உதவி மருத்துவர் பாலசுப்பிரமணியன், முதல்நிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் ரவீந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜபாண்டி ஆகியோர் தலைமையில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் போடும் பணி துவங்கியது.
விருதுநகரில் உள்ள பாத்திமாநகர், கட்டையாபுரம், பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த 35 தெரு நாய்களுக்கு உடனடியாக ஊசி செலுத்தப்பட்டதோடு ஊதா நிற அடையாளமும் போடப்பட்டது. தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடக்கும் என நகராட்சி சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
