ADDED : செப் 01, 2026 03:43 AM
செபஸ்தியார் சிலை உடைப்பு :4 பேர் கைது
சாத்துார்: மாதா கோவில் பட்டியில் ஆர்.சி மேற்கு தெருவில் புனித செபஸ்தியார் குருசடியில் ஆக.29ல் இரவு மர்ம நபர்கள் அங்கிருந்த சிலையை உடைத்து விட்டு தப்பினர். போலீஸ் விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த மைக் டைசன் 25.அபிஷேக் 25.அஜய் 22.அடைக்கலராஜ் 22.சிலையை சேதப்படுத்தியது தெரிய வந்தது. ஆலங்குளம் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது
சாத்துார்: இருக்கன்குடியை சேர்ந்தவர் ராமநாதன் 37. ஆற்றுப்பகுதியில் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்து சோதனை செய்ததில் 180 மி.லி., அளவு கொண்ட 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் வடிவேல் 49. கூலி தொழிலாளி. கடன் வாங்கி வீடு கட்டி உள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மதியம் காட்டுப்பகுதியில் விஷம் குடித்து மயங்கினார். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பலியானார்.
கேபிள் ஒயர் திருட்டு
நரிக்குடி: நரிக்குடியில் சோலார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் 43 செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை சோலார் நிறுவனத்தை பாலமுருகன் ரோந்து சுற்றி வந்த போது, 500 மீட்டருக்கும் அதிகமான சோலார் கேபிள் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
மிரட்டல் விடுத்த நபர் கைது
சிவகாசி: பழைய வில்லையாபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் காஞ்சனா 19. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் தங்கப்பாண்டிக்கும் 25, பழக்கம் ஏற்பட்டது. இவரின் நடவடிக்கை பிடிக்காத காஞ்சனா அவரிடம் பேசுவதை தவிர்த்தார். இந்நிலையில் காஞ்சனாவின் வீட்டிற்கு வந்த தங்கப்பாண்டி, தன்னுடன் பேசிய ஆடியோ உள்ளது. அதனை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்தார். அவரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் காரை மறித்து போராட்டம்
காரியாபட்டி: மல்லாங்கிணர் முடியனூரைச் சேர்ந்த பால்பாண்டி மகன் சொக்கலிங்கம் 22. இவர் மீது சில வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மல்லாங்கிணர் பஜாரில் தகராறு செய்தார். இது போலீசார் வருவதை அறிந்து தப்பி ஓடினார். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீட்டில் இருந்த போது போலீசார் அவரை பிடித்து அழைத்துச் சென்றனர். இதை அறிந்த தாய் லட்சுமி இன்ஸ்பெக்டர் காரை மறித்து போராட்டம் நடத்தினார். எவ்வளவோ சமாதானம் பேசியும் ஒரு மணி நேரம் பிடிவாதமாக இருந்தார். பின் ஒரு வழியாக சமாதானம் பேசி காரை எடுத்துச் சென்றனர்.
