/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாறுகால், ரோடு, குடிநீர், கழிப்பறை வசதி தேவை
/
வாறுகால், ரோடு, குடிநீர், கழிப்பறை வசதி தேவை
ADDED : மே 16, 2025 02:51 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்., நகர் விரிவாக்க பகுதியில் ரோடு , வாறுகால், குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. ரோட்டில் தேங்கும் கழிவுநீர், திறந்த வெளி கழிப்பறை, உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள் என்பது உட்பட பல்வேறு பிரச்சனைகளால் இம் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 7 வது வார்டை சேர்ந்தது எம்.டி.ஆர்., நகர் விரிவாக்க பகுதி. இங்கு 5க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகரின் மற்ற தெருக்களுக்கு ரோடுகள், வாறுகால்கள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தந்த நகராட்சி நிர்வாகம் விரிவாக்க பகுதியில் உள்ள தெருக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவில்லை. விரிவாக்க பகுதிக்கு வர முறையான ரோடு வசதி இல்லை.
மழைக்காலங்களில் ரோடு சகதியாகி விடுவதால் நடக்க முடியாமலும் வாகனங்களில் வந்து செல்ல முடியாமலும் மக்கள் அவதிப்படுகின்றனர். ரோட்டின் ஓரங்களில் நகரின் மொத்த குப்பை, கட்டட கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். நகராட்சி தூய்மை பணியாளர்களும் இங்கு தான் குப்பையை கொட்டுகின்றனர். குப்பைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் காற்றிற்கு பரந்து தெருக்கள் முழுவதும் பரவி விடுகிறது.
எம்.டி.ஆர்., 5 வது தெருவில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட ரோடு பணி முடிந்ததும் கிடப்பில் போட்டு விட்டனர். இந்த தெருவில் வாறுகால் வசதி இல்லை. கழிவுநீர் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. 5 வது தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பம் சேதமடைந்து கம்பிகளாக தெரியும் வகையில் விழும் நிலையில் உள்ளது. விரிவாக்க பகுதிகளில் குடிநீர் வசதி செய்யப்படவில்லை.
இங்கு பொது கழிப்பறை நவீன சுகாதார வளாகம் என எதுவும் கட்டப்படவில்லை. திறந்தவெளியை தான் கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் வருபவர்கள் பயந்து கொண்டே தான் வர வேண்டி உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோடு வேண்டும்
வைஜெயந்தி, குடும்பதலைவி: எம்.டி.ஆர்., நகரில் பல தெருக்களில் ரோடுகள் அமைக்க வேண்டும். 5 வது தெருவில் ரோடு, வாறுகால் வசதி செய்ய வேண்டும். கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது. ஏற்கனவே போடப்பட்ட ரோட்டையும் பாதாள சாக்கடை பணிக்காக பெயர்த்து விட்டனர். எங்களுக்கு ரோடு வாறுகால் வசதி செய்யப்பட வேண்டும்.
விழும் நிலையில் மின்கம்பம்
மேனகா, குடும்பதலைவி: மின் கம்பம் பல ஆண்டுகளாக சேதம் அடைந்து விழும் நிலையில் உள்ளது. தெருவில் நடமாட பயமாக உள்ளது. மின் கம்பத்தை அப்புறப்படுத்த பல முறை நகராட்சியில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
அடிப்படை வசதிகள் இல்லை
முத்துமலர், குடும்பதலைவி: எம்.டி.ஆர்., நகர் விரிவாக்க பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் நகராட்சி செய்து தரவில்லை. நகராட்சிக்கு தேவையான அனைத்து வரிகளையும் கட்டுகிறோம். ஆனால் எங்களுக்கு வசதிகளை செய்து தருவதில் நகராட்சி மெத்தனம் காட்டுகிறது.