ADDED : ஆக 25, 2025 02:43 AM
வத்திராயிருப்பு : கடந்த சில மாதங்களாக போதிய அளவிற்கு மழை பெய்யாததால் வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் குறைந்து வறண்டு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வத்திராயிருப்பு தாலுகாவில் கூமாபட்டி, கான்சாபுரம், நெடுங்குளம், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், சுந்தரபாண்டியம், புதுப்பட்டி பகுதிகளில் கன்மாய்கள் உள்ளது. பருவ காலங்களில் மழை பெய்து கண்மாய்கள் நிரம்பும் பட்சத்தில் தாலுகாவே பசுமையாக காணப்படும். இப்பகுதி விவசாயிகள் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள், கிணறுகளில் உள்ள தண்ணீரை நம்பி அதிகளவில் நெல் சாகுபடி செய்து வரு கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய அளவிற்கு மழை பெய்யாததால் கொடிக்குளம், கான்சாபுரம், வத்திராயிருப்பு விராகசமுத்திரம், பெரியகுளம், சுந்தரபாண்டியம் செங்குளம் உட்பட பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் குறைந்து வறண்டு காணப்படுகிறது. கிணறுகளிலும் தண்ணீர் மட்டம் குறைந்து வருகிறது.
இதனால் அடுத்த சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை போதிய அளவிற்கு பெய்யாததால் வடகிழக்கு பருவமழையாவது அதிகளவில் பெய்து அணைகள், கன்மாய்கள், கிணறுகள் நிரம்புமா என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.