/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேர்தல் பணியாற்றியவர்கள் ஊதியம் கிடைக்காமல் தவிப்பு
/
தேர்தல் பணியாற்றியவர்கள் ஊதியம் கிடைக்காமல் தவிப்பு
தேர்தல் பணியாற்றியவர்கள் ஊதியம் கிடைக்காமல் தவிப்பு
தேர்தல் பணியாற்றியவர்கள் ஊதியம் கிடைக்காமல் தவிப்பு
ADDED : பிப் 18, 2024 12:35 AM
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பிப்ரவரி 19ல் நடந்தது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சி, 9 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடைமுறைகள் துவங்கியதால் விதி மீறல்களை தடுப்பதற்கு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தேர்தல் அதிகாரிகளுடன் போலீசார், வருவாய்த்துறையினர், ஒரு வீடியோகிராபரும் பங்கேற்றனர்.
இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ஒரு குழுவும், காலை 6:00 மணி முதல் மதியம் 2:00மணி வரை இரண்டாவது குழுவும், மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூன்றாவது குழுவும் என 24 மணி நேரமும் பறக்கும் படையினர் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் நடவடிக்கையை அக்குழுவில் பங்கேற்ற வீடியோ கிராபர் பதிவு செய்தார்.
இதே போல் வேட்பு மனு தாக்கல் துவங்கிய நாள் முதல், ஓட்டு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்கும் வரை வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இந்த வீடியோ பதிவிற்கு மாவட்டத்தில் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரின் மூலம் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் அந்தந்த பகுதி வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. இதில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் எட்டு மணி நேரத்திற்கு ஒருவர் விதம் தினமும் 3 கேமராமேன்கள் வீடியோ பதிவு செய்தனர்.
இதன்படி தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் வேட்புமனு தாக்கல் துவங்கிய 2022 ஜனவரி 29 முதல் ஓட்டு எண்ணிக்கை நடந்த பிப்ரவரி 22 வரை இடைவிடாது வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதில் 280க்கும் மேற்பட்ட வீடியோ கிராபர்கள் பணியாற்றினர்.
இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 1200 வீதம் 28 நாட்களுக்கு பணியாற்றியதற்கான தொகை, பாதி வழங்கிய நிலையில் மீதி பணம் வழங்கவில்லை. இதனால் அவர் மூலம் நியமனம் செய்யப்பட்ட வீடியோகிராபர்களுக்கு பணம் கிடைக்கவில்லை.
இதுவரை பலமுறை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும், என்ன காரணத்திற்காகவோ தேர்தல் முடிந்து 2 ஆண்டுகளாகியும் இன்னும் வீடியோ பதிவிற்கான மீதி பணம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பணியில் ஈடுபட்ட வீடியோகிராபர்கள் மிகுந்த பணக்கஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, தாங்கள் பணியாற்றியதற்கான மீதி பணத்தையும் உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டுடியோ உரிமையாளர்களும், வீடியோ கிராபர்களும் எதிர்பார்க்கின்றனர்.