/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மரங்களிலும், மின்கம்பங்களிலும் விடாது துரத்தும் அத்துமீறல் விளம்பர பலகைகள்
/
மரங்களிலும், மின்கம்பங்களிலும் விடாது துரத்தும் அத்துமீறல் விளம்பர பலகைகள்
மரங்களிலும், மின்கம்பங்களிலும் விடாது துரத்தும் அத்துமீறல் விளம்பர பலகைகள்
மரங்களிலும், மின்கம்பங்களிலும் விடாது துரத்தும் அத்துமீறல் விளம்பர பலகைகள்
ADDED : ஆக 16, 2025 11:50 PM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மரங்களிலும், மின்கம்பங்களிலும் விடாது துரத்தும் அத்துமீறலாய் விளம்பர பலகைகள் பொருத்துவது அதிகரித்து வருவதால் மரங்கள் பட்டு போவதுடன், மின் ஊழியர்கள் பேரிடர் காலங்களில் சிரமப்படும் சூழல் உள்ளது.
மாவட்டத்தில் பசுமை வழிச்சாலை திட்டத்தின் பேரில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் ரோடுகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன் மூலம் வருங்காலங்களில் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடு கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதே நேரம் மரத்திற்கு வேட்டு வைக்க மற்றொரு வகையில் விளம்பர பலகைகளை மரங்களில் ஆணி அடிக்கின்றனர். வரும் வாகன ஓட்டிகள் பார்ப்பதற்காக இவர்கள் செய்யும் இந்த செயலால், மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றன.
ஏற்கனவே இம்மரங்கள் வேர்பிடிக்கும் வரை தண்ணீர் ஊற்றக் கூட ஆளில்லாத நிலை தான் உள்ளது. இந்நிலையில் ஆணிகள் வேறு அடிப்பதால் அவை பலமிழந்து விடுகின்றன. அவற்றின் பசுமை நரம்புகள் பாதிக்கப்பட்டு உயிரூட்டம் குறைந்து விரைவில் பட்டு போய்விடுகின்றன. குடியிருப்புகளை சுற்றி இருக்கும் மரங்களை விட ரோட்டோரம் இருக்கும் மரங்கள் விரைந்து பட்டு போக இது தான் முக்கிய காரணம்.
இதே ஆணி அடிக்கும் கும்பல், மின்கம்பங்களில் இதே விளம்பர பலகைகளை கம்பி வைத்து கட்டுகின்றனர். இதனால் பேரிடர் நேரங்களில் மின் ஊழியர்களால் துரிதமாக செயல்பட முடியாமல் போகிறது.
பசுமைக்குழுவின் பணியே மரங்களை பாதுகாப்பது தான். விருதுநகர் மாவட்டத்தில் இக்குழு செயல்பாட்டில் இல்லை. பெயருக்கு தான் உறுப்பினர்கள் வனத்துறை, வேளாண்துறை, நெடுஞ்சாலைத்துறையில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் மரங்களில் ஆணி அடிப்பதையும், மின்கம்பங்களில் கம்பி கட்டுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.