/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, மாயமான மடைகள், *நரிக்குடி குமிழாங்குளம் விவசாயிகள் வேதனை
/
சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, மாயமான மடைகள், *நரிக்குடி குமிழாங்குளம் விவசாயிகள் வேதனை
சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, மாயமான மடைகள், *நரிக்குடி குமிழாங்குளம் விவசாயிகள் வேதனை
சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, மாயமான மடைகள், *நரிக்குடி குமிழாங்குளம் விவசாயிகள் வேதனை
UPDATED : டிச 11, 2025 09:14 AM
ADDED : டிச 11, 2025 06:32 AM

நரிக்குடி, துார் வாராததால் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, மாயமான மடைகள், வரத்து கல்வாய்களால் தண்ணீர் வரத்தின்றி விவசாயம் செய்ய முடியாமல் நரிக்குடி குமிழாங்குளம் கண்மாய் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நரிக்குடி குமிழாங்குளத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கண்மாய் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 3 மடைகள் இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசன வசதி நடந்தது. காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் கண்மாய்க்கு வந்து சேரும். இரு போகம் விவசாயம் நடைபெறும். நாளடைவில் வரத்து கால்வாய் இல்லாததால் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து குறைந்தது. மடைகள், வாய்க்கால்கள் சேதம் அடைந்தன. வயல்கள் சீமை கருவேல மரங்கள் முளைத்து தரிசாகின. கண்மாய் துார்வாரி 15 ஆண்டுகளாகின. தற்போது மழை பெய்து தண்ணீர் வந்தாலும் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு முற்றிலும் சேதம் அடைந்து கிடக்கின்றன. துார்வாரி, மடைகளை சீரமைத்து, வாய்க்கால்கள் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
வெளியேறும் தண்ணீர்.
பெரியசாமி, விவசாயி.
இருப்போகம் விவசாயம் நடைபெறும். சரிவர கண்மாய்க்கு நீர் வரத்து இல்லாததால், ஒரு போகம் கூட விவசாயம் செய்ய முடியவில்லை. விளைச்சல் ஏற்பட்டு,
10 ஆண்டுகளாகின. கிடைக்கிற தண்ணீரும் வீணாக வெளியேறி வருகிறது. துார்வாரி 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆகின. காலதாமதப்படுத்தாமல் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாயமான மடைகள்
அய்யாவு, விவசாயி.
மூன்று மடைகள் இருந்தன. தற்போது காணாமல் போயின. நீர் கசிவு ஏற்படுவதை கொண்டு தண்ணீரைப் பாய்ச்சி சிறிது காலம் விவசாயம் செய்து வந்தோம். தற்போது அந்த நிலைமையும் இல்லை. சீமை கருவேல மரங்கள் முளைத்து கண்மாய் இருக்கும் இடமே தெரியாமல் போனது. மடைகளை சீரமைத்து விவசாயத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.
வரத்துக்கால்வாய் அவசியம்
நாகேஷ், விவசாயி.
கண்மாய்க்கு நீர் ஆதாரம் கிடையாது. காட்டுப்பகுதியில் பெய்யும் மழை நீர் தான் வரும். வரத்து கால்வாய் ஏற்படுத்த வலியுறுத்தினோம். நடவடிக்கை இல்லை. கண்மாயிலிருந்து உபரி நீர் வெளியேற ஓடை உள்ளது. அதுவும் சீரமைக்காமல் புதர் மண்டி, குப்பை நிறைந்து காணப்படுகின்றன. சீரமைத்து, கண்மாய்க்கு நீர் வரத்துக்கு, வரத்து கால்வாய் ஏற்படுத்த வேண்டும்.
கரை அரிப்பை தடுக்க வேண்டும்:
வெள்ளைச்சாமி, விவசாயி.
கண்மாய் கரையில் தார் ரோடு உள்ளது. மழை பெய்து நீர் இரு புறங்களிலும் வெளியேறும் போது கரைகளை அரித்து சேதப்படுத்துகின்றன. கரையை பலப்படுத்த முடியாது. தடுப்புச் சுவர் கட்டி, கரை அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுத்து, வாய்க்கால்கள் கட்ட வேண்டும்.
வாசுகி, பி.டி.ஓ.,
துார்வார பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் விரைவில் நிறைவேற்றப்படும்.

