இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம்: ரேஷன் ஊழியர்கள் வலியுறுத்தல்
இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம்: ரேஷன் ஊழியர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 15, 2026 07:13 AM
விருதுநகர்: ரேஷன் ஊழியர்களுக்கு இளநிலை உதவியாளர் பெறும் அடிப்படை ஊதியமான ரூ.19 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா கூறினார்.
அவர் கூறியதாவது: தமிழக அரசு அமைத்த ஊதிய மாற்ற கமிட்டி உடன் ஜன., 2ல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எங்களுக்கு இளநிலை உதவியாளர் சம்பளம் ரூ.19 ஆயிரத்து 500 தரக் கோரிக்கை வைத்துள்ளோம். பிளஸ் 2 கல்வித் தகுதி அடிப்படையில் பணிபுரிகிறோம்.
புளூடூத் பி.ஓ.எஸ்., முறையால் சிரமம் உள்ளது. ரேஷன் கடைகளில் தனியாக எடையாளர் இருந்தால் தான் சமாளிக்க முடியும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் முன்பே இந்த கோரிக்கை வைத்திருந்தோம். அரசு செவிசாய்க்க மறுத்து வருகிறது.
பொது வினியோக திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும் என்பது எங்கள் நீண்ட நாள் கோரிக்கை.
ரேஷன் கடைகளில் கழிப்பறை கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதி அப்படியே உள்ளது. முதற் கட்டமாக மாற்றுத்திறனாளி, பெண் ஊழியர்களுக்காவது செய்ய வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும்.
கூட்டுறவு சங்க செயலாளர்கள் இடம் மாற்றாததால் வைப்பு நிதி பிடித்தம் உள்ளிட்டவற்றில் சுணக்கம் உள்ளது. துணை பதிவாளர்கள் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.
இத்தனை கோரிக்கைகளில் ஊதிய உயர்வுக்கு மட்டுமே அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. மற்ற கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும். பொங்கல் விடுமுறை முடிந்து மாநில சங்கக் கூட்டம் நடத்தி அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும், என்றார்.
