/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாடகை இடத்திலுள்ள பஸ் பணிமனையை நிரந்தரமாக்க ... எதிர்பார்ப்பு: காலியாகும் அச்சத்தில் அலுவலர்கள், ஊழியர்கள்
/
வாடகை இடத்திலுள்ள பஸ் பணிமனையை நிரந்தரமாக்க ... எதிர்பார்ப்பு: காலியாகும் அச்சத்தில் அலுவலர்கள், ஊழியர்கள்
வாடகை இடத்திலுள்ள பஸ் பணிமனையை நிரந்தரமாக்க ... எதிர்பார்ப்பு: காலியாகும் அச்சத்தில் அலுவலர்கள், ஊழியர்கள்
வாடகை இடத்திலுள்ள பஸ் பணிமனையை நிரந்தரமாக்க ... எதிர்பார்ப்பு: காலியாகும் அச்சத்தில் அலுவலர்கள், ஊழியர்கள்
ADDED : ஜூலை 14, 2025 02:38 AM

காரியாபட்டி: காரியாபட்டியில் வாடகை இடத்தில் இயங்கி வரும் பஸ் அரசு போக்குவரத்து பணிமனையை நிரந்தரமாக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. கண்டும் காணாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் காலியாகுமோ என்கிற அச்சத்தில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
காரியாபட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க., ஆட்சியில் தற்காலிக அரசு போக்குவரத்து பணிமனை, வாடகை இடத்தில் துவக்கப்பட்டது. இப்பகுதி கிராமங்களுக்கு பஸ்களை எளிதில் இயக்க ஏதுவாக இருந்து வருகிறது.
பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு கூட புதிய வழித்தடங்களை ஏற்படுத்தி பஸ்களை இயக்கி வருகின்றனர். அடிக்கடிஇதற்காக விழாவும் நடத்தப்பட்டு வருகிறது.
பணிமனை நிரந்தரமாக இருந்தால் தான் இது போன்ற வசதிகளை தொடர்ந்து செயல்படுத்த முடியும். அப்படி இருக்கும்போது, இதுவரை பணிமனையை நிரந்தரமாக்க முயற்சிக்கவில்லை.
வாடகை ஒப்பந்தம் முடிந்து, காலி செய்ய வலியுறுத்தப்பட்டது. கூடுதல் வாடகை தருவதாக பேசி தொடர்ந்து அதே இடத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள காரியாபட்டி, மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஊர். தேர்வு நிலை பேரூராட்சியாக உள்ளது.
வேலை வாய்ப்பு, படிப்பு வசதி, போக்குவரத்து வசதி என மக்கள் அதிகம் குடியேறி வருகின்றனர். விரைவில் நகராட்சியாக தரம் உயர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இருக்கும் போது, நிரந்தர பணிமனை அமைப்பது கூடுதல் சிறப்பாக அமையும். பல முறை நிரந்தரமாக்க வலியுறுத்தியும், இடம் இல்லை என அதிகாரிகள் மெத்தனப் போக்கில் உள்ளனர்.
காரியாபட்டியில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அதிகாரிகள் கையகப்படுத்த முன் வருவதில்லை. சிலர் பட்டா நிலங்களை பணிமனைக்கு தானமாக கொடுக்க முன் வருகின்றனர். அப்படி இருந்தும் அதையும் பொருட்படுத்தாமல் அசட்டையாக உள்ளனர். தற்போது பணிமனையை காலி செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிரைவர்கள், கண்டக்டர்கள், பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட பணிமனை இதுவரை நிரந்தரமாக்கப்படாதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர்.
காரியாபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நிரந்தர பணிமனை ஒன்று ஏற்படுத்த வேண்டும்.