/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெயரளவிற்கு செயல்படும் உழவர் சந்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர எதிர்பார்ப்பு
/
பெயரளவிற்கு செயல்படும் உழவர் சந்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர எதிர்பார்ப்பு
பெயரளவிற்கு செயல்படும் உழவர் சந்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர எதிர்பார்ப்பு
பெயரளவிற்கு செயல்படும் உழவர் சந்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 16, 2025 12:12 AM

சிவகாசி: சிவகாசியில் பெயரளவிற்கு செயல்படும் உழவர் சந்தையை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசியில் உழவர் சந்தை 2000ல் துவக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தின் 101வது உழவர் சந்தையாக சிறப்பு பெற்ற இங்கு 54 கடைகள், காய்கறி இருப்பு அறை, தகவல் மையம், அலுவலகம் உள்ளது.
துவக்கத்தில் வடபட்டி, சாமிநத்தம், துலுக்கப்பட்டி, வேண்டுராயபுரம், முத்துசாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்கள் தங்கள் விளை பொருட்களை இங்கு விற்பனை செய்தனர்.
இதற்காக அரசு சார்பில் இலவச பஸ் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டது. ஆறு ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்ட உழவர் சந்தையால் சிவகாசி தவிர சுற்று கிராம மக்கள் பலரும் ஒரே இடத்தில் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி பயன் பெற்றனர். அதன் பின்னர் உழவர் சந்தை முழுமையாக செயல்படவில்லை. தொடர்ந்து 2022- - 23 நிதி ஆண்டில் ரூ. 33.25 லட்சத்தில் உழவர் சந்தை மறு சீரமைப்பு செய்யப்பட்டும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை.
தற்போது பெயரளவிற்கு இரு கடைகள் மட்டுமே செயல்படுகிறது. எனவே உழவர் சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக 2024 ஜூலை 5ல் வேளாண் விற்பனை, வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை மீட்டுருவாக்க விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், உழவர் சந்தைக்கு விளை பொருட்களை கொண்டு வருவதற்கு போக்குவரத்து வசதி, உழவர் சந்தையில் குடிநீர், கழிப்பறை என அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் உழவர் சந்தையை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விற்கப்படும் காய்கறிகளின் விலைகள் குறித்து நகரின் மையப்பகுதி விளம்பரமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதன் பின்னர் இது குறித்து யாருமே கண்டு கொள்ளவில்லை. தற்போதும் இங்கு இருகடைகள் மட்டும் பெயரளவிற்கு செயல்படுகின்றது. எனவே உழவர் சந்தையை மீண்டும் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.