/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி மருத்துவமனையில் பிணவறை ஏற்படுத்த எதிர்பார்ப்பு
/
காரியாபட்டி மருத்துவமனையில் பிணவறை ஏற்படுத்த எதிர்பார்ப்பு
காரியாபட்டி மருத்துவமனையில் பிணவறை ஏற்படுத்த எதிர்பார்ப்பு
காரியாபட்டி மருத்துவமனையில் பிணவறை ஏற்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 26, 2025 03:22 AM
காரியாபட்டி: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் பிணவறை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். மதுரை, தூத்துக்குடி நான்கு வழி சாலை, பிற பகுதியில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களை இங்கு கொண்டு வருகின்றனர். ஓரளவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இப்பகுதியில் ஏற்படும் பல்வேறு விபத்துகளில் இறப்பவர்களை பிரேத பரிசோதனை செய்ய அருப்புக்கோட்டை, விருதுநகர் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்ட தூரம் அலைய வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. உரிய நேரத்திற்கு பரிசோதனை செய்து உடலை பெறுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. சொந்த ஊருக்கு கொண்டு செல்ல கூடுதல் செலவு ஏற்படுகிறது. சில நேரங்களில் 2 நாள் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க காரியாபட்டியில் பிணவறை ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
தற்போது காரியாபட்டி அரசு மருத்துவமனையில் ரூ. 3 கோடியே 50 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், பழைய கட்டடத்தில் இட வசதி மீதம் இருக்கும். அதில் பிணவறை ஏற்படுத்தலாம். நிறைவேறும் பட்சத்தில் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.