பாதாள சாக்கடை பணிகளின் போதே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்பார்ப்பு
பாதாள சாக்கடை பணிகளின் போதே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : பிப் 09, 2026 06:08 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே வாறுகால், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் சேர்த்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலை துறை, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாட்டில் ரோடுகள், பொது இடங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி, வருவாய் துறை, போலீஸ் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது வழக்கம். ஆனால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், ரோடு ஓரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நடைபாதை கடைகள், கடைகளின் சன் ஷேடுகள், ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
இதனால் நடைபாதைகளில் மக்கள் நடக்க முடியாமல் ரோட்டில் நடப்பதால் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது. அருப்புக்கோட்டையில் ஒன்றரை ஆண்டிற்கு முன், கடமைக்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. தற்போது நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதற்காக வாறுகால்கள், ரோடுகள் தோண்டப்படுகின்றன.
இந்த நேரத்தில் நெடுஞ்சாலை, வருவாய் துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் எதையும் கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
