/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
/
சாத்துாரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
சாத்துாரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
சாத்துாரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 01, 2024 05:07 AM
சாத்துார், : சாத்துாரில் ரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனபொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்துார் ரயில்வே பீடர் ரோடு வழியாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து நென்மேனி இருக்கன்குடி, சந்தையூர்,, கோல்வார்பட்டி, கோட்டூர், அப்பையநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் பாலவனத்தம், அருப்புக்கோட்டை , நாகலாபுரம், புதுார் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள், கனரக வாகனங்களும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றன. இதனால் ரயில்வே பீடர் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ,போன்ற நாட்களில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கும் ஏராளமான பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களிலும் வாடகை வாகனங்களிலும் கோயிலுக்கு வருகின்றனர் .இதனால் சாத்துார் நகர் பகுதி மற்றும் ரயில்வே பீடர் ரோடு பகுதி முற்றிலுமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்து நடமாடக் கூட முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் சாத்துார் ரயில் நிலையம் வழியாக தினந்தோறும் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. ரயில் ஒன்று கடந்து செல்ல குறைந்தபட்சம் 10 நிமிடம் ரயில்வே கேட் பூட்டப்படுகிறது.
இரண்டு ரயில்கள் கிராசிங் ஆகும் பொழுது 10 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்கும் நிலை உள்ளது. சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ்களும் , சிகிச்சைக்கு டவுன் வரும் நோயாளிகளும் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
சாத்துாரில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் என பல மாதங்களுக்கு முன்பு நாளிதழில் அறிவிப்பு வெளியான நிலையில் இன்று வரை இதற்கான ஆயத்த பணிகள் ஏதும் நடைபெறவில்லை.
அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் சாத்தூர் மெயின் ரோடு மற்றும் ரயில்வே பீடர் ரோடு பகுதிகளில் நீண்ட தொலைவில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் டிராபிக் ஜாம் ஆவதால் நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே மத்திய மாநில அரசுகள் சாத்துாரில் விரைவாக ரயில்வே மேம்பாலம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.