ADDED : ஜன 14, 2026 06:21 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: பொங்கல் பண்டிகை விற்பனை அதிகரிக்கும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெல்லம் விலை குறைந்து வருவதால் உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் செண்பகத் தோப்பு, மம்சாபுரம் பகுதிகளில் வெல்லம் உற்பத்தி பல ஆண்டுகளாக அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் பயிரிடப்பட்டு, ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் கேரளாவிற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஓணம் பண்டிகையின்போது ஒரு மடங்கு வெல்லம் கூடுதலாக விற்பனை நடக்கும்.
கடந்த வாரம் வரை ஒரு கிலோ வெல்லம் ரூ. 70 வரை விற்பனையானது. ஆனால், தற்போது மொத்த விற்பனை ரூ. 55 எனவும், சில்லறை விற்பனை ரூ. 60 முதல் 65 வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வரும் நிலையில் வெல்லம் உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொள்முதல் விலை, விற்பனை விலை குறைவால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
