/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கணக்கெடுப்புக்காக இதர பணிகளில் சுணக்கம் ஏற்படுத்துவது ஏன் புலம்பும் விவசாயிகள்
/
கணக்கெடுப்புக்காக இதர பணிகளில் சுணக்கம் ஏற்படுத்துவது ஏன் புலம்பும் விவசாயிகள்
கணக்கெடுப்புக்காக இதர பணிகளில் சுணக்கம் ஏற்படுத்துவது ஏன் புலம்பும் விவசாயிகள்
கணக்கெடுப்புக்காக இதர பணிகளில் சுணக்கம் ஏற்படுத்துவது ஏன் புலம்பும் விவசாயிகள்
ADDED : நவ 17, 2024 05:32 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடந்து வரும் டிஜிட்டல் பயிர் சர்வே கணக்கெடுப்புக்காக பயிர் காப்பீடு, பயிர் சேதம் தொடர்பான புகார்கள் போன்ற இதர பணிகளில் வேளாண்துறையினர் சுணக்கம் காட்டுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் டிஜிட்டல் பயிர் சர்வே நடந்து வருகிறது. விளைநிலங்களில் விவரம், பயிர் செய்த படம் ஆகியவற்றை கணினியில் பதிவேற்றி அரசின் திட்டங்களுக்காக இந்த டிஜிட்டல் பயிர் சர்வே நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் நடந்து வரும் இந்த சர்வே பணி விருதுநகர் மாவட்டத்தில் நவ. 9 முதல் துவங்கி நடந்து வருகிறது. இதில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், பொறியியல் துறைகளின் தொழில்நுட்பம் சார்ந்த, சாராத அலுவலர்கள் தலைமையில் மதுரை, தேனி வேளாண் கல்லுாரி மாணவர்கள், பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று கள ஆய்வு செய்து வருகின்றனர்.
வேளாண் துறையினர் முழு நேரமும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளுக்காக அலுவலர்களை தொடர்பு கொண்டால் கணக்கெடுப்பில் இருப்பதாக கூறுவதாக புலம்புகின்றனர். பயிர் காப்பீடு, பூச்சி தாக்குதல், பன்றிகளால் சேதம் குறித்து பேசினால் அதற்கும் கணக்கெடுப்பை காரணம் காட்டி அலுவலர்கள் புறக்கணிப்பதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.
டிஜிட்டல் சர்வே மூலம் விவசாயிகள் பயன்பெறுவது உண்மை தான். அதே நேரம் தற்போது மழைக்காலம் என்பதால் நடவு முடிந்து பயிர்கள் வளர்ந்து வரும் சூழலாக உள்ளதால் பாதிப்பு தொடர்பாக அலுவலர்களை அணுக முடியாத சூழல் இருப்பது விவசாயிகள் மத்தியில் தவிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே கணக்கெடுப்போடு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து இதர பணிகளை செய்வதும் அவசியமாகி உள்ளது.

