/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரு மூடை உரம் போதுமானதாக இல்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புலம்பல்
/
இரு மூடை உரம் போதுமானதாக இல்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புலம்பல்
இரு மூடை உரம் போதுமானதாக இல்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புலம்பல்
இரு மூடை உரம் போதுமானதாக இல்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புலம்பல்
ADDED : அக் 18, 2025 03:38 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் யூரியா வரவில்லை. ஒரு நபருக்கு இரு மூடை என்பது போதுமானதாக இல்லை. ஏக்கருக்கு ஒரு மூடையாவது தர வேண்டும். என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் அளித்தனர்.
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன், வேளாண் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
ஞானகுரு , மலையடிவார விவசாயிகள் சங்கம்: சுற்றுச்சூழல் உணர்திறன் கமிட்டி மூலம் மம்சாபுரம் அத்தித்துண்டு - கல்லுகட்டி ஊருணி ரோடு அமைக்க வேண்டும். வாழைக்குளம் கண்மாய் கலுங்கு நீர் ஸ்ரீவி., பெரியகுளம் கண்மாயில் சேர்கிறது. இதன் இடையே உள்ள முருகபஞ்சான் ஆற்றுப்பாசனம் எனும் இடத்தில் தடுப்பணை அமைத்தால் 400 ஏக்கர் விவசாயிகள் பயன்பெறுவர்.
நாராயணசாமி , தமிழ் விவசாயிகள் சங்கம்: காட்டுப்பன்றியை வனத்துறை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் நாட்டு நாய்களை கொண்டு நாங்களே வேட்டையாடுவதை கண்டு கொள்ளக் கூடாது. கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பெல்லாம் பயிர் நாசம் ஆக காண்கிறோம். அரசு தீர்வு காண வேண்டும். அதே போல் பயிர் பாதிப்படைந்தவர்களுக்கு பயிர்க்காப்பீடு வழங்குவதே இல்லை.
அம்மையப்பன் , சேத்துார்: உலர்களம் அமைக்க வேண்டும். பருவமழை நெருங்குகிறது.
ராமச்சந்திரராஜா , தமிழக விவசாயிகள் சங்கம்: தரமில்லாத உரங்களை தந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பல கூட்டுறவு சங்கங்களில் யூரியா வரவில்லை. ஒரு நபருக்கு இரு மூடை என்பது போதுமானதாக இல்லை. ஏக்கருக்கு ஒரு மூடையாவது தர வேண்டும்.
விஜயமுருகன் , தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: கோவிலான்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில் 480 ஏக்கர் நிலத்தில் 170 நில எடுப்புக்கான அரசாணையை திரும்ப பெற வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு மார்க்கெட்டிங் தேவை உள்ளது. அதை பரிசீலிக்காமல், சான்று வழங்கும் நடவடிக்கை அதன் போக்கை கட்டுப்படுத்தி குறைக்கும் ஒன்றாக மாறும்.
ராமமூர்த்தி , ஸ்ரீவில்லிபுத்துார்: மின் வழிப்பாதைக்கு தென்னை மரங்களுக்கான இழப்பீடு கோவை மாவட்டத்தில் மரம் ஒன்றுக்கு ரூ.1500 வரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் வெறும் ரூ.500 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உயர்த்திதர வேண்டும்.
பாலகணேசன் , ஸ்ரீவில்லிபுத்துார்: தடை செய்யப்பட்ட உரங்களின் விவரங்களை நாளிதழ்களில் செய்தியாக வெளியிட வெளிப்படை தன்மையோடு மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும்.
முருகன் , தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: மக்காசோள பயிரை படைப்புழுவிடம் இருந்து காப்பாற்றினாலும், காட்டுப்பன்றியால் அழிந்து விடுகிறது. நெல் கொள்முதல் நிலையங்களை முன்கூட்டியே திறக்க வேண்டும்.
தரமில்லாத உரங்களை விற்பதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். இதற்கு ஒரு பக்கம் இன்னொரு விவசாயிகள் அதிகாரிகளுக்கு ஆதரவாக இருந்ததால் இரு தரப்பு வாக்குவாதம் ஏற்பட்டது.
இவ்வாறு விவாதம் நடந்தது.