/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தண்ணீர் பற்றாக்குறையால் கருகி வரும் நெற்பயிர்கள் வேதனையில் நரிக்குடி பகுதி விவசாயிகள்
/
தண்ணீர் பற்றாக்குறையால் கருகி வரும் நெற்பயிர்கள் வேதனையில் நரிக்குடி பகுதி விவசாயிகள்
தண்ணீர் பற்றாக்குறையால் கருகி வரும் நெற்பயிர்கள் வேதனையில் நரிக்குடி பகுதி விவசாயிகள்
தண்ணீர் பற்றாக்குறையால் கருகி வரும் நெற்பயிர்கள் வேதனையில் நரிக்குடி பகுதி விவசாயிகள்
ADDED : அக் 30, 2025 03:37 AM
நரிக்குடி: நரிக்குடி பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் பற்றாக்குறையாகி, நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
நரிக்குடி பகுதியில் உளுத்திமடை, இருஞ்சிறை, கட்டனூர், உலக்குடி, மறையூர், மாயலேரி, மானூர், வீரசோழன் உள்ளிட்ட 46 கண்மாய்களுக்கு கிருதுமால் நதி நீர் கிடைக்க பெற்று, அப்பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்தாண்டு வடகிழக்கு பருவமழையால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், நெல் நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரு சில நாட்கள் மட்டுமே பெய்த பருவ மழையால் நீர்நிலைகளுக்கு போதிய தண்ணீர் வரத்து இல்லை. வைகை ஆற்றில் இருந்து உபரி நீரும் திறந்து விடாததால், நீர்நிலைகளில் பற்றாக்குறையாக உள்ளது. மழையும் கைவிட்டதால் போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. கடன் வாங்கி விவசாயம் செய்ததால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
பஞ்சவர்ணம், விவசாயி, கூறியதாவது:
வைகை ஆற்றில் தண்ணீர் வரும் போதெல்லாம் நிரந்தர ஆயகட்டு இல்லாததால், பல்வேறு போராட்டங்களுக்கு இடையே கிருதுமால் நதியில் பாசனத்திற்கு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தண்ணீர் பெறவேண்டி உள்ளது. தற்போது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அதிகப்படியான உபரி நீர் வெளியேறி வருகிறது. நிரந்தர ஆயக்கட்டு உரிமை இல்லாததால் கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கவில்லை.
உளுத்திமடை அணைக்கட்டு வறண்டு கிடப்பதால், 46 கண்மாய்களுக்கும் தண்ணீர் இன்றி பற்றாக்குறையாக உள்ளது. நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகி வருகிறது.
பயிர் காப்பீடு செய்தாலும் சரி வர நிவாரணம் கிடைப்பது இல்லை. அதிகாரிகளை சந்தித்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி உள்ளோம். திறந்து விட்டால் ஓரளவிற்கு நெற்பயிர்களை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் இந்த ஆண்டும் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவோம். அரசாணை வெளியிட்டு, நிரந்தர நீர் பங்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

