/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான மடைகள், தண்ணீர் தேக்கமின்றி பாழ் பாவாலி கண்மாய் விவசாயிகள் கவலை
/
சேதமான மடைகள், தண்ணீர் தேக்கமின்றி பாழ் பாவாலி கண்மாய் விவசாயிகள் கவலை
சேதமான மடைகள், தண்ணீர் தேக்கமின்றி பாழ் பாவாலி கண்மாய் விவசாயிகள் கவலை
சேதமான மடைகள், தண்ணீர் தேக்கமின்றி பாழ் பாவாலி கண்மாய் விவசாயிகள் கவலை
ADDED : ஜூன் 12, 2025 01:56 AM

விருதுநகர்: பாவாலியில் பல ஆண்டுகளாக சேதமாகியும் சீரமைக்கப்படாத கண்மாய் மடைகள், தண்ணீரை தேக்க முடியாமல் வெளியேறுவதால் குறுகி வரும் விவசாய பரப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் பாவாலி கண்மாய் பாசன விவசாயிகள்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாவாலியில் கண்மாய் உள்ளது. இதன் மூலம் 100 ஏக்கரில் விவசாயம் நடந்து வந்தது. பல ஆண்டுகளாக கண்மாய் துார்வாரப்படாமலும், கரைகள் சீரமைக்கப்படாமலும் உள்ளது.
இதனால் கரைகள் வலுவிழந்த நிலையில் காணப்படுகிறது. கண்மாய் இரு மடைகளும் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாததால் சேதமானது.
இந்த மடைகளை இதுவரை சீரமைக்காமல் இருப்பதால் கண்மாய் நிறைந்தும் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை.
இதனால் சோளம், நெல், வெண்டை, வெள்ளரி, கத்தரி உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் பயிரிட்ட விவசாயிகள் தற்போது கிணற்று பாசனத்தை நம்பி நடவு பணிகளை செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கண்மாய் துார்வாரும் பணிகளும் முறையாக நடக்காமல் கண் துடைப்பாக நடந்தது.
மேலும் கண்மாய், கரைப்பகுதிகளில் கருவேல மரங்கள் நன்கு அடர்ந்து வளர்ந்து காடு போன்று உள்ளது. இவற்றை அகற்றுவதற்கான பணிகளை செய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
மடைகள் சீரமைப்பு தேவை
ஆதவன் வடிவேல், விவசாயி: பாவாலி கண்மாய் இரு மடைகளும் சேதமாகி 18 ஆண்டுகளாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இது குறித்து தொடர்ந்து பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கண்மாய் துார்வாருதல் வேண்டும்
பெரிய முத்தையா, விவசாயி: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துார்வாரும் பணிகளும் கண் துடைப்பு பணியாகவே நடந்தது. எனவே கண்மாய் துார்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணிகளை அடுத்து தண்ணீர் வருவதற்குள் துவங்க வேண்டும்.
-பாசனப்பரப்பு குறைகிறது
முனியாண்டி, விவசாயி: கண்மாய் துார்வாராததாலும், மடைகள், கரைகள் முறையாக பராமரிக்கப்படாததாலும் தண்ணீரை தேக்க முடியவில்லை.
இதனால் பாவாலி பகுதியில் விவசாய பாசனப்பரப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.