இறுதி கட்டத்தில் பட்டாசு உற்பத்தி: பணிகள் விறுவிறு
இறுதி கட்டத்தில் பட்டாசு உற்பத்தி: பணிகள் விறுவிறு
UPDATED : அக் 14, 2026 04:49 AM
ADDED : அக் 13, 2026 05:17 PM

சிவகாசி:தீபாவளிக்கு இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை பகுதிகளில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1100 பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசு ஆலைகளில் விதி மீறல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், போலீசார், வருவாய்த்துறை தீயணைப்புத்துறை அடங்கிய குழுக்கள் செயல்பட்டன. மத்திய பெட்ரோலிய வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் (பெசோ) குழுவினரும் ஆய்வு செய்தனர். ஆய்வில் 300 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் விதிமீறி இயங்கியதாக கண்டறியப்பட்டு தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது. இவற்றில் 70 சதவீத ஆலைகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
தீபாவளிக்கு இன்னும் 23 நாட்களே உள்ளது. இதில் விடுமுறை தினங்கள் போக 13 நாட்கள் மட்டுமே பட்டாசு உற்பத்தி நடைபெற வாய்ப்புள்ளது. குறைந்த நாட்களே உள்ளதால் இப்பகுதியில் பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமாக நடக்கின்றன. சரவெடிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில் ஆலைகளில் சரவெடியும் உற்பத்தி செய்யப்படுகிறது.

பட்டாசு ஆலை உரிமையாளர் பொன் குமார் கூறியதாவது: மூலப் பொருட்களின் விலை உயர்வு, அதிகாரிகள் ஆய்வால் பட்டாசு ஆலைகள் மூடல் போன்ற காரணங்களால் இந்தாண்டு உற்பத்தி சதவீதம் குறைந்துள்ளது. மக்கள் விரும்பும் வெரைட்டி பட்டாசுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றார்.
