UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 11:20 PM
l பெண்களின் வாழ்வாதாரத்திற்கு கறவை மாடுகள்
l பால் உற்பத்தி அதிகரிக்க 100 சதவீத மானியத்தில்
விருதுநகர்: பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய திருச்சுழி, நரிக்குடி கிராமங்களில் உள்ள பெண்களுக்கு 100 சதவீதம் மானியத்தில் 400 பேருக்கு கறவை மாடுகள் வழங்கப் படவுள்ளது என கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்தார்.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கிராமப்பகுதிகளில் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் நடப்பாண்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் ரூ.50 ஆயிரத்தில் கறவை மாடும், அதற்கான காப்பீடு, வீடுகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து, தீவன செலவினத் திற்காக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. 18 முதல் 60 வயதுடைய பெண்கள், திருநர்கள், ஆர்வம் உள்ளவர்கள், போதிய இடவசதி, தீவன வசதி உள்ளோர், 2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களை கொண்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கலெக்டர் ஷரண்யா அறி செய்திக்குறிப்பு: இத்திட்டம் தற்போது திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படுகிறது. இரு ஒன்றியங்களை சேர்ந்த 400 பெண்களுக்கு மாடுகள் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு https;//virudhunagar.nic.in, www.ahd.tn.gov.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், துணை இயக்குனர் அலுவலகம், விருதுநகர், திருச்சுழி, நரிக்குடியில் உள்ள உதவி மருத்துவர், கால்நடை மருந்தகங்கள் ஆகிய விண்ணப்ப உதவி மையங்களை அணுகலாம். விரும்புவோர் tnahschemes.tn.gov.in என்ற இணையத்தில் டிச.17 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
