/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பலன்தராத, வெற்று அறிவிப்பு வேளாண் பட்ஜெட் *விவசாயிகள் விளாசல்
/
பலன்தராத, வெற்று அறிவிப்பு வேளாண் பட்ஜெட் *விவசாயிகள் விளாசல்
பலன்தராத, வெற்று அறிவிப்பு வேளாண் பட்ஜெட் *விவசாயிகள் விளாசல்
பலன்தராத, வெற்று அறிவிப்பு வேளாண் பட்ஜெட் *விவசாயிகள் விளாசல்
ADDED : மார் 16, 2025 06:45 AM

வேளாண் பட்ஜெட் குறித்த கருத்து கேட்பு கூட்டத்திலேயே எங்களின் குரல் அரசின் செவிகளில் எட்டவில்லை. அதை பிரதிபலிப்பது போலவே அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டும் வெற்று அறிவிப்பாக, பலன் தராத பட்ஜெட்டாக உள்ளது என்று விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
வழக்கமான அறிவிப்பே
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி (ஒரு பகுதி) ஆகிய மாவட்ட விவசாயிகளின் 35 ஆண்டுகள் கோரிக்கையான அச்சன்கோவில் பம்பையாறு அழகர் அணை திட்டத்தின் ஆய்வு பணிக்கு கூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல், கரும்பு உள்பட பல பயிர்களுக்கு மத்திய அரசும், தனியார் நிறுவனங்களும் இன்ஸ்சூரன்ஸ் வழங்குகின்றன. அதே போல தமிழக அரசும் இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
வன விலங்குகளால் பயிர்கள் பாழாகுவதற்கு உரிய இழப்பீடுகள் பெறமுடிவதில்லை. இதை சரிசெய்வதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மக்காச்சோளம் பயிரிடுவதற்கு செலவு குறைவு என்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர். இதனால் உற்பத்தி பரப்பு தானாகவே அதிகரித்து வருகிறது. ஆனால் மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ரூ. 40 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு செய்ததற்கு பதிலாக மதிப்பு கூட்டுதல், சந்தைபடுத்துவதற்கு ஒதுக்கீடு செய்திருந்தால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருந்திருக்கும்.
- ஏ. விஜயமுருகன், மாநில துணை செயலாளர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விருதுநகர்.
* விவசாயிகளுக்கு பலன் இல்லை
மிகுந்த எதிர்பார்ப்போடு சட்டசபை தேர்தல் வரக்கூடிய காலகட்டத்தில் இந்த விவசாய பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை. மலர் சாகுபடிக்கு தனி ஆணையம் என எதிர்பார்த்ததில் அதுவும் இல்லை. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அறிவிப்பு இல்லை. தமிழக அரசு வருவாய் 3.30 லட்சம் கோடி இதில் 12 ஆயிரம் கோடிக்கு மட்டும் விவசாயத்திற்கான செலவை சுருக்கி கொள்கின்றனர். தரமான விதைகள் வழங்கப்படும் என்கின்றனர். சென்ற ஆண்டில் வேளாண் துறை மூலம் வழங்கப்பட்ட விதைகள் பல ஊர்களில் முளைக்கவே இல்லை.
ராம்பாண்டியன், விவசாயி, அருப்புக் கோட்டை :
___
குறைவான நிதி ஒதுக்கீடு
தமிழக வேளாண் பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயனடைய மானியங்களை வாரி வழங்கி உள்ளது. காவிரி - வைகை - கிருதுமால் -குண்டாறு பாசன விவசாயிகள் பயன்பெற எந்த திட்டமும் கிடையாது. அடையாறு நதி சீரமைக்க ரூ. ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மொத்த வருவாயில் 14 சதவீதம் தான் விவசாயத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. தேர்தல் அறிக்கையில் அளித்த வேளாண் சம்பந்தப்பட்ட வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றப்படவில்லை. ஒரே ஒரு திட்டம் நம்பிக்கை தருகிறது விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 ஆயிரத்து 500 ஏக்கரில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுப்பது ஆறுதல் அளிக்கிறது. மற்றபடி விவசாயிகளை வஞ்சிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
மச்சேஸ்வரன், மாநில துணைத் தலைவர், காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாய சங்கம், கட்டனூர்,
.....
வெறும் அறிவிப்பு மட்டுமே
கண்மாய் ஒட்டிய நன்செய் விளை நிலங்களை பிளாட்டுகளாக மாற்றுவதை தடுக்கும் அறிவிப்பு இல்லை. இதில் மாநிலம் முழுவதும் சாகுபடி பரப்பை உயர்ந்திருப்பதாக காட்டியுள்ளனர். பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதார விலை என கரும்புக்கு ரூ. 4,000, நெல்லுக்கு 2,500 என்ற வாக்குறுதிகள் கானல் நீர். பாசனத்திற்கான நீர் ஆதாரங்களை பாதுகாப்பது பற்றி இடம்பெறவில்லை. விவசாயிகளுக்கு கூட்டுறவு, தனியார் வங்கிகள் மூலம் கடன் வழங்குவதில் உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்தும் அறிவிப்பு இல்லை. விவசாய கூலி பணிகளுக்கு தடையாக உள்ள ஊரக வேலை உறுதி திட்ட நடைமுறையை தேவையானபோது விவசாய பணிகளுக்கு மாற்ற முயற்சிக்கவில்லை. மொத்தத்தில் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் வெறும் அறிவிப்பு மட்டுமே.
அம்மையப்பன், விவசாயி, சேத்துார்
-----.......
பயன்தாரது
மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கு ரூ 2000 மானியம் வழங்கப்படும் என்பதும் போதுமானது இல்லை. நெல் பயிருக்கு அரசு விலை நிர்ணயம் செய்வது போல மக்காச்சோளத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும்.சிறுதானிய உற்பத்தி செய்வதில் செலவு அதிகம் என்பதால் மானாவாரி தொகுப்பு வழங்கினால் மட்டுமே சிறுதானிய உற்பத்தியை பெருக்க முடியும்.இயற்கை சீற்றங்களால் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திருந்த போதும் பயிர் காப்பீடு தொகை முறையாக பெற்றுத் தர அரசு முயற்சிக்காதது ஏமாற்றம் தருகிறது.தமிழக பட்ஜெட் எந்த ஒரு விவசாயிகளுக்கும் பயன்தராது ஏமாற்றம் தரும் பட்ஜெட் ஆகும். என்றார்.
தனுஷ்கோடி ராஜ்,
மாநில மானாவாரி விவசாயிகள் சங்க தலைவர். என். மேட்டுப்பட்டி.சாத்துார்.
......
மானியத்தை உயர்த்தலாம்
மானாவாரி நிலங்களில் பருவமழையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 2025 - 26 ஆண்டில் மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்திட எக்டருக்கு ரூ. 2000 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை உயர்த்தி கொடுத்து இருந்தால் உதவியாக இருந்திருக்கும். மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தில் உழவர்கள் பயன்படும் வகையில் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் இப்பகுதியில் மக்காச்சோளத்தினை காட்டுப்பன்றிகள் அதிகளவில் தாக்குகிறது. இதனால் அதிக இழப்பு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு குறித்து அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூபாய் பத்து லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பெரிய அளவில் செயல்பாட்டில் இல்லை.
சீனிவாசன், விவசாயி, சித்தமநாயக்கன்பட்டி,
............
ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்
மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம், சொட்டு நீர் பாசனம் மற்றும் 37 மாவட்டங்களில் இயற்கை விவசாயத்திற்குரிய திட்டங்கள், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உயர்த்தி தருவது வரவேற்கத்தக்கது. கொப்பரை தேங்காய் மற்றும் மா கொள்முதல் திட்டங்கள் இல்லாதது, நெல் கொள்முதல் ஆதார விலை உயர்த்தி கொடுக்காதது, விவசாய நிலங்களில் உள்ள வரத்து கால்வாய்கள், நீர்வரத்து ஓடைகள் சீரமைப்பு, குடி மராமத்து திட்டங்கள் இல்லாதது, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரபகுதி விவசாயிகளுக்கென சிறப்பு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
-கோவிந்தராஜ், ஸ்ரீவில்லிபுத்துார்.