கோயில் அருகில் கொட்டப்படும் குப்பை: பக்தர்கள் முகம் சுளிப்பு
கோயில் அருகில் கொட்டப்படும் குப்பை: பக்தர்கள் முகம் சுளிப்பு
ADDED : செப் 14, 2026 05:42 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் கோயில்கள் அருகில் குப்பையை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை சத்தியமூர்த்தி பஜார் பகுதி வழியாக செல்லும் திருச்சுழி ரோடு அருகில் தாதன்குளம் பிள்ளையார் கோயில் உள்ளது. இதை சுற்றி ஏராளமான கடைகள் உள்ளன. கோயில் காம்பவுண்ட் சுவர் வளைவு பகுதியில், ரோட்டில் அந்த பகுதி கடைகாரர்கள் குப்பையை குவிக்கின்றனர். நகராட்சியின் ஒப்பந்த துாய்மை பணியாளர்களும் அங்கு தான் குப்பையை மூடையாக கட்டி போடுகின்றனர். எந்நேரம் பார்த்தாலும் குப்பை குவிந்து கிடக்கிறது.
காற்றிற்கு பாலித்தீன் பைகள் பறந்து ரோட்டில் பரவி கிடக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதை பார்த்து முகம் சுளிக்கின்றனர்.
இதேபோன்று, சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், பட்டாபிராமர் கோயில், அமுதலிங்கேஸ்வரர் கோயில்களின் காம்பவுண்ட் சுவர் பகுதிகளில் குப்பை கொட்டப்படுகிறது.
நகராட்சி நிர்வாகம் ரோட்டில் குப்பைகளை கொட்டும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி ஒப்பந்த பணியாளர்களிடம் கோயில் பகுதிகளில் குப்பைகளை கொட்ட கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
