ADDED : பிப் 18, 2026 07:52 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் பேட்டரி வண்டிகள் பழுதான பின் குறைந்த தரமுடைய பேட்டரிகள் ஒதுக்கி அவை 6 மாதங்கள் முன்பே தீர்ந்து விட்டன. அதே போல் புதிதாக வாங்கப்பட்ட வண்டிகளிலும் முன்புற கண்ணாடிகள் போன்றவை சேதமாகின்றன.
செயல்படாத வண்டிகளால் துாய்மை பணியாளர்கள் 2 கி.மீ., துாரத்திற்கு தள்ளுவண்டியை தள்ளி குப்பை சேகரிக்கின்றனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் 2019 முதல் துாய்மை பணியாளர்களுக்கு என பேட்டரி வாகனங்கள் தரப்பட்டது. இவை அடிக்கடி பழுதான போது பணியாளர்களே தங்கள் சொந்த பணம் போட்டு பழுது பார்த்து வந்தனர்.
இந்நிலையில் பெரும்பாலான நகராட்சிகளில் சுத்தமாக பேட்டரி வண்டிகள் பயன்பாட்டை இழந்து விட்டன. இந்நிலையில் சில நகராட்சிகளில் நகர்மன்றங்களில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிதியும் ஒதுக்கப்பட்டது.
தாமதமாக வழங்கப்பட்ட அவை 6 மாதங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.
5 நகராட்சிகளில் விருதுநகர் நகராட்சியில் 36 வாார்டுகளிலும் இதே நிலை தான் உள்ளது. இதனால் தினசரி 2 கி.மீ.,க்கு மேல் தள்ளுவண்டியை கொண்டு குப்பையை சேகரித்து வருகின்றனர்.
ஊராட்சிகளில் குப்பை வாங்குவது போன்று நகர் பகுதிகளில் தள்ளுவண்டியை கொண்டு குப்பை சேகரிக்கும் அவல நிலை உள்ளது.
ஏற்கனவே துாய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் நகராட்சிகளால் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் இது போன்று 2 கி.மீ., துாரத்திற்கு நடந்தும், வண்டியை தள்ளியும் குப்பையை சேரிக்க வற்புறுத்துவது ஒரு வகை மனித உரிமை மீறலாகவே உள்ளது. இந்த நிலை அருப்புக்கோட்டை, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சிகளிலும் உள்ளது.
பழுதடைந்த பேட்டரி வண்டிகளை சரி செய்து தீர்வு காண வேண்டும். முழுவீச்சில் துாய்மை பணிகளை செய்ய தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும்.
