/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவக்கல்லுாரி விளையாட்டு மைதானங்கள் பணி இழுத்தடிப்பு: பொதுப்பணித்துறைக்கு நிதி கொடுத்தும் துவங்காத நிலை
/
அரசு மருத்துவக்கல்லுாரி விளையாட்டு மைதானங்கள் பணி இழுத்தடிப்பு: பொதுப்பணித்துறைக்கு நிதி கொடுத்தும் துவங்காத நிலை
அரசு மருத்துவக்கல்லுாரி விளையாட்டு மைதானங்கள் பணி இழுத்தடிப்பு: பொதுப்பணித்துறைக்கு நிதி கொடுத்தும் துவங்காத நிலை
அரசு மருத்துவக்கல்லுாரி விளையாட்டு மைதானங்கள் பணி இழுத்தடிப்பு: பொதுப்பணித்துறைக்கு நிதி கொடுத்தும் துவங்காத நிலை
ADDED : ஜன 23, 2025 03:55 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு வாலிபால், கூடைப்பந்து மைதானங்கள் அமைப்பதற்காக பொதுப்பணித்துறைக்கு நிதி கொடுத்து நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை பணிகள் துவங்கப்படவில்லை. மருத்துவ மாணவர்கள் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு சென்று பயிற்சிகள் செய்யும் நிலையே தொடர்கிறது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி 2022 ஜன. 12ல் திறக்கப்பட்டு, தற்போது நான்காம் ஆண்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர். அடுத்தாண்டு முதுகலை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளது.
மருத்துவக்கல்லுாரி துவங்கும் போதே மாணவர்கள் விளையாடுவதற்காக வாலிபால், கூடைப்பந்து மைதானங்கள் அமைத்து கொடுக்க வேண்டும் என ரூ. 15 லட்சம் பொதுப்பணித்துறைக்கு கல்லுாரி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.
மேலும் கடந்தாண்டு ரூ. 49 லட்சத்தில் கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் விளையாட்டு மைதானங்களுடன் வாலிபால், கூடைப்பந்து அமைக்க கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
ஆனால் வாலிபால், கூடைப்பந்து மைதானங்கள் அமைக்கும் பணிகளை நான்கு ஆண்டுகளாகியும் பொதுப்பணித்துறை நிர்வாகம் துவங்கவில்லை.
இதனால் மருத்துவ மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் நான்கு வழிச்சாலையை கடந்து மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்ளும் நிலையே தொடர்கிறது. இதனால் மருத்துவ மாணவிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து கல்லுாரி நிர்வாகம் கேட்கும் போது எல்லாம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து அமைக்கின்றோம் என வாய்மொழி வாக்குறுதியதாக கூறுகின்றனர். ஆனால் பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை என கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதனால் தேசிய, மாநில அளவிலான விளையாட்டுகளில் மாணவர்களால் பங்கேற்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். முதுகலை மருத்துவம் படிப்பை துவங்குவதற்குள்ளாவது பொதுப்பணித்துறையினர் விளையாட்டு மைதானங்களை அமைத்து கொடுக்க வேண்டும்.
எனவே அரசு மருத்துவக்கல்லுாரியில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகளை இழுத்தடிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக பணிகளை துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

