ADDED : செப் 08, 2025 06:18 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாலை விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டியில் பரவலாக மழை பெய்தது. நரிக்குடியில் மாலையில் கனமழை கொட்டித் தீர்த்தது.
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அக்னி நட்சத்திரம் போல வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் பகலில் வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர். கடந்த சில நாட்களாக பகலில் வெயில், மாலையில் மழை பெய்து வருகிறது.
நேற்று வழக்கம் போல பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் பகுதிகளில் மேக கூட்டங்கள் தென்பட்டாலும் மழை இல்லை. விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டியில் மாலையில் பரவலாக மழை பெய்தது.
ஆனால் நரிக்குடியில் மாலை 5:30 மணிக்கு பெய்ய துவங்கிய மழை அடுத்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கொட்டித்தீர்த்தது. இதனால் நகர், புறநகர் பகுதிகளில் ரோட்டில் மழை நீர் ஆறாக ஓடியது. பகல் நேர வெப்பத்தை மாலையில் பெய்த மழை தணித்தது.