/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
''திறமைகளை வளர்த்து கொண்டால் வேலை நிச்சயம்''
/
''திறமைகளை வளர்த்து கொண்டால் வேலை நிச்சயம்''
ADDED : டிச 22, 2024 07:11 AM

அருப்புக்கோட்டை : மாணவர்கள் படிப்புடன் திறமைகளை வளர்த்துக் கொண்டால் வேலை நிச்சயம் கிடைக்கும் என வேலை வாய்ப்பு முகாமில் அமைச்சர் அறிவுறுத்தினார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முகாமில் பங்கேற்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பேசியதாவது: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் வேலை அளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் ஆகிய இரண்டு தரப்பையும் நேரடியாக இணைத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஒரு பாலமாக இந்த முகாம் அமைந்துள்ளது.
எதிர்கால சமுதாயம் இளைஞர்களின் கையில் தான் உள்ளது. இந்த நாட்டை ஆளக்கூடியவர்கள் அதிகாரியாக, பேராசிரியராக, விஞ்ஞானியாக வரக்கூடியவர்கள் இளைஞர்கள் ஆகிய நீங்கள் தான். இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் திட்டம் இது. நீங்கள் முதலில் உங்களை தரம் உயர்த்திக் கொள்ள வேண்டும்.வேலை தேடுபவர்கள் படிப்புடன் மட்டும் அல்லாமல் அதற்கு மேலான திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். என்றார்.
முகாமில் டி.ஆர்.ஓ. ராஜேந்திரன், வேலை வாய்ப்பு மண்டல இணை இயக்குனர் சண்முகசுந்தர், நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, கல்லூரி முதல்வர் உமாராணி, பேராசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட கலந்து கொண்டனர்.