அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு அவசியம்
அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு அவசியம்
ADDED : மார் 16, 2026 07:08 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்களுக்கு மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசிய தேவையாக மாறியுள்ளது.
மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், காரியப்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் ஆகிய நகர் பகுதிகள், அதனை சுற்றியுள்ள புறநகர், ஊரகப்பகுதிகளில் தொடர்ந்து குழந்தை திருமணங்களும், ஊரகப்பகுதிகளில் அதிக அளவிலும் நடக்கிறது.
குடும்ப சூழ்நிலையால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ஜவுளி நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்களுக்கு வேலைக்கு சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் திருமண வயதை அடைவதற்குள் பெற்றோரே நல்ல வரன் வந்துள்ளது என திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
மேலும் கல்லுாரியில் படிக்கும் மாணவிகள் சிலர் காதல் ஏற்பட்டு படிக்கும் போதே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் குழந்தையை பெற்றேடுக்கும் திறனை பெறாத நிலையில் கர்ப்பமாவதால் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது.
குழந்தை திருமணங்கள் நடப்பது குறித்த தகவல்கள் கிடைத்து அதை அதிகாரிகள் தடுக்கும் நடவடிக்கையை எடுக்கின்றனர். ஆனால் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு இன்மை உள்ளது.
கர்ப்பமாகி அரசு மருத்துவமனைகளுக்கு வரும் போது தான் அவர்கள் குழந்தை திருமணம் செய்திருப்பது தெரிகிறது. அதன் பின் கணவர், பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இது போன்று சம்பவங்கள் நடந்து முடிந்த பின் நடவடிக்கை எடுப்பதை விட தவறுகள் நடப்பதை முன்கூட்டியே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
