/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஸ்டாப்பிங் இல்லாத வெளிமாநில ரயில்கள்; பயணிகள் வேதனை
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஸ்டாப்பிங் இல்லாத வெளிமாநில ரயில்கள்; பயணிகள் வேதனை
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஸ்டாப்பிங் இல்லாத வெளிமாநில ரயில்கள்; பயணிகள் வேதனை
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஸ்டாப்பிங் இல்லாத வெளிமாநில ரயில்கள்; பயணிகள் வேதனை
ADDED : டிச 12, 2024 04:42 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: வெளி மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படாததால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.
108 வைணவ தலங்களில் ஒன்றானதும், தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்ட ஆண்டாள் கோயில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆன்மிக நகர். இத்தாலுகாவில் அமைந்துள்ள பெருமாள் தேவன்பட்டியில் இருந்து பல தலைமுறையாக வீட்டுக்கு ஒருவர் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பல ஆயிரம் இளைஞர்கள் பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், நாக்பூர், மும்பை போன்ற வெளி மாநிலங்களில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் வந்து செல்ல வசதியாக திருநெல்வேலி யில் இருந்து புறப்பட்டு தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், மதுரை வழியாக வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டுமென கோரி வருகின்றனர். ஆனால், இந்திய ரயில்வே நிர்வாகம் இதுவரை ஒரு ரயில் கூட இதுவரை இயக்கவில்லை. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாரம் இருமுறை இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை.
கடந்த மாதம் மைசூரில் இருந்து சேலம், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, புனலூர் வழியாக கொல்லத்திற்கு இயக்கப்பட்ட ரயிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது சபரிமலை சீசனை முன்னிட்டு டிச.19, 26ல் செகந்திராபாத்தில் இருந்து வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், ராஜபாளையம், செங்கோட்டை, புனலூர் வழியாக கொல்லத்திற்கு இயங்கும் சிறப்பு ரயிலிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை.
ஆன்மிக நகரான ஸ்ரீவில்லிபுத்தூரில் வட மாநில ரயில்கள் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்குவதில் இந்திய ரயில்வே துறை உயர் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் மக்கள் மேலும் வேதனை அடைந்துள்ளனர். எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக இயக்கப்படும் அனைத்து வெளி மாநில ரயில்கள் தங்கள் ஊரில் நின்று செல்ல மக்கள் பிரதிநிதிகளும், பொதுநல அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.