ADDED : மே 29, 2026 12:59 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை விசாரிக்க வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் எம்.எல்.ஏ.,வும், சமூக நலத்துறை அமைச்சரான ஜெகதீஸ்வரி நேற்று எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்து வைத்த பின் கடந்த ஆட்சியில் தென்றல் நகர் அருகே திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு ஆய்வு செய்தார்.
இதில் குடியிருப்பு வாசிகள் தரப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் வசிக்காமல் வேறு நபர்களுக்கு உள் வாடகை விட்டுள்ளதாகவும், தகுதியுடையவர்கள் வீடுகள் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்பு பராமரிப்பு செலவுக்காக மாதத் தொகை வசூலித்தும் அதற்கான சுகாதாரம் பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை. 864 வீடுகளுக்கு 2 தூய்மை பணியாளர்கள் 2 குடிநீர் ஆப்பரேட்டர் பணியமர்த்தப்பட்டுள்ளது போதுமானதாக இல்லை. வீடுகளை சுற்றிலும் குப்பை அகற்றாமல் குவிக்கப்பட்டுள்ளது.
அலைபேசிகளுக்கான நெட்வொர்க் கிடைக்காததால் வெளி உலக தொடர்பு இல்லாமல் உள்ளது. உறுதி கூறப்பட்ட அவசர தேவைகளுக்கான மருத்துவ, போக்குவரத்து வசதிகள் இப்பகுதியில் இல்லை, என தெரி வித்தனர்.
புகார்களை கேட்டறிந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, தொகுப்பு வீடுகள் ஒதுக்கீட்டில் விதிகளை மீறி வீடுகளை பெற்று உள் வாடகைக்கு விட்டுள்ளது குறித்து உரிய விசாரணை மேற்கொள்வதுடன், அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
