/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பார்வையாளர் நேரக்கட்டுப்பாடில் குளறுபடி
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பார்வையாளர் நேரக்கட்டுப்பாடில் குளறுபடி
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பார்வையாளர் நேரக்கட்டுப்பாடில் குளறுபடி
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பார்வையாளர் நேரக்கட்டுப்பாடில் குளறுபடி
ADDED : அக் 16, 2024 04:12 AM
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்க்க வருபவர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் குளறுபடியால் தற்போது எல்லா நேரமும் பார்வையாளர்கள் சகஜமாக சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனைத்து பகுதிகளிலும் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தனியார் மருத்துவமனைகளில் ஸ்கேன், எக்ஸ்ரே, பரிசோதனைகள், சிகிச்சைக்கு அதிக செலவாவதால் அரசு மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மருத்துவர்கள் உள்நோயாளிகளை பார்க்கும் நேரத்தில் பார்வையாளர்களும் வருவதால் கலந்துரையாட முடியாமல் போனது. இதனால் பார்வையாளர் நேரம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
உள்நோயாளியை உடன் இருந்து பார்த்துக் கொள்பவருக்கு உதவியாளருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு, அட்டை வைத்துள்ளவர் எல்லா நேரமும் அனுமதிக்கப்பட்டனர். இந்த அனுமதி ஒரு நபருக்கு மூன்று நாட்கள் மட்டும் வழங்கப்பட்டது.
மேலும் நோயாளியை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் காலை 6:00 மணி முதல் 8:00 மணி, மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி, இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இடைப்பட்ட நேரத்தில் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் நேரக்கட்டுப்பாடு நடை முறைக்கு வந்த நாள் முதல் பார்வையாளர்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மருத்துவமனை பாதுகாப்பு பணியாளர்கள் அனுமதித்தனர்.
தற்போது நேரக்கட்டுப்பாடு பெயரளவில் மட்டுமே கடைப்பிடிக்கப்படுவதால் பார்வையாளர்கள் எல்லா நேரமும் சகஜமாக வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவர்கள், நோயாளிகளுடன் கலந்துரையாட முடியாமல் திண்டாடுகின்றனர். எனவே விருதுநகர் அரசு மருத்துவமனையில் பார்வையாளர் நேரக்கட்டுப்பாட்டில் உள்ள குறைகளை களைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.