/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் காய்கறி, ஆடு சந்தைகள் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
/
காரியாபட்டியில் காய்கறி, ஆடு சந்தைகள் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
காரியாபட்டியில் காய்கறி, ஆடு சந்தைகள் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
காரியாபட்டியில் காய்கறி, ஆடு சந்தைகள் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : மார் 14, 2024 03:08 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் காய்கறி வாரச்சந்தை, ஆட்டுச் சந்தை ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டி முதல் நிலை பேரூராட்சியில் சுற்றியுள்ள 150 க்கு மேற்பட்ட கிராமத்தினர் முக்கிய தொழிலாக தோட்ட விவசாயம் செய்து வருகின்றனர். விளைந்த காய்கறிகளை மதுரை மார்க்கெட்டிற்கு கொண்டு செல்வதால் நேரம், பணம் விரையம் ஆகிறது. சிறிய அளவிலான விவசாயிகள் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஊர் ஊராக சுற்றி விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
காரியாபட்டியில் காய்கறி வாரச்சந்தை ஏற்படுத்தினால், இப்பகுதியில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் எளிதில் விற்பனை செய்ய முடியும். குறைந்த விலையில், சுத்தமான, சுகாதாரமான காய்கறிகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும்.
அதேபோல் இப்பகுதியில் அதிகளவில் விவசாயிகள் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். அவசரத் தேவைகளுக்கு ஆடுகளை அவ்வப்போது விற்பனை செய்ய வேண்டிய சூழலில், பல்வேறு ஊர்கள் தாண்டி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். கூடுதல் செலவுகள் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். சீசன் இல்லாத நேரங்களில் குறைந்த விலைக்கு விற்பதால், மன உளைச்சல் அடைகின்றனர்.
இதனால்காரியாபட்டியில் ஆட்டுச் சந்தை நடத்த வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். தற்போது சனிக்கிழமை தோறும் கோழி சந்தை நடைபெறுகிறது. இப்பகுதியில் உள்ள ஏராளமானோர் கோழி சந்தைக்கு வந்து செல்கின்றனர். போர்ச் சேவல், நாட்டுக் கோழிகள் என வீடுகளில் வளர்க்கப்பட்டு தரமானதாக விற்படுகிறது.
தோனுகால் கிராமத்தில் வியாழக் கிழமையில் ஆடு, காய்கறி வாரச் சந்தையும், முடுக்கன்குளத்தில் சனிக் கிழமை காய்கறி சந்தையும் நடக்கிறது. இதனை கணக்கிட்டு வாரச் சந்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். காரியாபட்டி பகுதியைச் சுற்றிலும் ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்களை, தனி நபர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனை கண்டறிந்து அரசு நிலங்களை கைப்பற்றி வாரச்சந்தைக்கும், ஆட்டு சந்தைக்கும் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

