/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெரிய ஊராட்சிகள், ஒன்றியங்களை பிரிப்பது கட்டாயம்: வளர்ச்சி பணிகள் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பு
/
பெரிய ஊராட்சிகள், ஒன்றியங்களை பிரிப்பது கட்டாயம்: வளர்ச்சி பணிகள் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பு
பெரிய ஊராட்சிகள், ஒன்றியங்களை பிரிப்பது கட்டாயம்: வளர்ச்சி பணிகள் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பு
பெரிய ஊராட்சிகள், ஒன்றியங்களை பிரிப்பது கட்டாயம்: வளர்ச்சி பணிகள் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பு
ADDED : அக் 31, 2025 01:42 AM

மக்கள் தொகை அதிகரிக்கும் போது அரசின் நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள், தாலுகாக்களை பிரிப்பது வழக்கமான நடைமுறை. இது போல வளர்ச்சித்துறையில் ஒன்றியங்களை பிரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஊரக வளர்ச்சித்துறையில் 1963 முதல் ஒன்றியங்கள், ஊராட்சிகள் எதுவும் பிரிக்கப்படவில்லை. ஆனால் தற்போது வருவாய்த்துறையில் தாலுகாக்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 9 தாலுகாக்கள் இருந்த நிலையில் 10வது தாலுகாவாக வத்திராயிருப்பு வந்து விட்டது.
மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள், 450 ஊராட்சிகள் உள்ளன. 5 ஆயிரம் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு ஊராட்சிகளையும், 75 ஆயிரம் மக்கள் தொகை அடிப்படையில் ஒன்றியங்களையும் பிரிக்கலாம் என ஊரக வளர்ச்சித்துறையினர், மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 3 புதிய ஒன்றியங்கள், 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை உருவாக்க முடியும்.
தற்போது ஊராட்சிகள், நகராட்சிகளை இணைக்கும் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. விருதுநகர் ஒன்றியத்தில் 57 ஊராட்சிகள் உள்ளன. சிவகாசியில் 59 ஊராட்சிகள் உள்ளன. இவற்றின் மையப்பகுதியில் ஆமத்துாரோ, எரிச்சநத்தம் போன்ற இடங்களை மையாக வைத்து புதிய ஒன்றியத்தை உருவாக்கலாம்.
சாத்துார், வெம்பக்கோட்டை ஒன்றியங்களில் தலா 45 ஊராட்சிகள் உள்ளன. இதன் மையத்திலும் புதிய ஒன்றியம் உருவாக்கலாம். ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், பகுதிகளில் 7 பேரூராட்சிகள் உள்ளன. இதனால் ஊராட்சிகள் குறைவாக உள்ளன. இருப்பினும் ராஜ பாளையம், வெம்பக்கோட்டை அடுத்தடுத்து இருப்பதால் இதை மையாக வைத்தும் ஒன்றியம் உருவாக்கலாம்.
ஒரு ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் வரை இருப்பது தான் நிர்வாக வசதிக்கு நல்லது என வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகின்றனர். அதிகப்படியாகும் போது பணி அழுத்தம் தான் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஊராட்சிகளை பிரிக்க மக்களிடம் தீர்மானம், கருத்து கேட்க தான் செய்கின்றனர். ஆனால் பெரிதாக ஆர்வம் இல்லை என்கின்றனர்.
விருதுநகர் ஒன்றியம் ரோசல்பட்டி, சிவஞானபுரம், கூரைக்குண்டு ஊராட்சிகள், இதே போன்று சிவகாசி பள்ளப்பட்டி, ஆனையூர், விஸ்வநத்தம் ஊராட்சிகள், சாத்துாரில் வெங்கடசாலாபுரம், படந்தால் ஊராட்சிகள், அருப்புக்கோட்டையில் பாலையம்பட்டி, பாலவநத்தம், பந்தல்குடி, வெம்பக்கோட்டையில் தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, ராஜபாளையத்தில்சமுசிகாபுரம், தெற்கு வெங்காநல்லுார், மேலராஜகுலராமன்போன்றவை பெரிய ஊராட்சிகளாக உள்ளன.
இவற்றில் சில மாநகராட்சி, நகராட்சிகளோடு இணைக்க ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஊராட்சிகள் தரப்பில் ஆட்சேபணையும் உள்ளது.
எப்படியாயினும், நிர்வாக வசதிக்கு பெரிய ஊராட்சிகள், ஒன்றியங்களை பிரித்தால் மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சித்துறையின் பணிகள் மேம்படும்.

