ADDED : மார் 25, 2026 10:16 PM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செங் குளம் கண்மாயில் கழிவுகள் கொட்டப்பட்டும், நீர் வரத்து ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியும், சேதமடைந்த தடுப்பணை கட்டப்படாமலும், நீர் பிடிப்பு இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டும், சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதால் கண்மாய் பாசன விவ சாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நகரின் கிழக்கு பகுதியில் சிவகாசி ரோட்டில் அமைந்துள்ள இந்த கண்மாயின் மூலம் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் 200 ஏக்கர் பரப்பளவில் பல தலைமுறையாக விவசாயம் செய்து வருகின்றனர். அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த கண்மாய்க்கு வடமலைக்குறிச்சி, பெரிய குளம் கண்மாய்களில் இருந்து தண்ணீர் வருவதற்கான நீர்வரத்து ஓடைகள் உள்ளன.
இதில் வடமலைகுறிச்சி நீர்வரத்து ஓடையில் நகரின் ஒட்டுமொத்த கழிவு தண்ணீர் தான் வருகிறது. பெரியகுளம் கண்மாயிலிருந்து வரும் நீர் வரத்து ஓடையில் கிளைச் சிறை அருகில் ராஜகுலா ராமபேரி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வழியில் தடுப்பு சுவரும், சமரணையும் உள்ளது.
இதில் சமரணை உடைந்து பல ஆண்டு களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதன் பாதையில் குடியிருப்புகள், கட்டடங்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்து ஆக் கிரமிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கண்மாயில் முழு அளவில் தண்ணீர் தேக்க முடியாமல் விவ சாயம் செய்யும் சாகுபடி பரப்பளவு ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.
கண்மாயில் அதிகளவில் கழிவுகள் கொட்டப் படுகிறது. நீர் பிடிப்பு பகுதிகள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
ரோட்டோர கழிவுகள் நீர்வரத்து ஓடையில் கொட்டப்பட்டு பாதைகள் குறுகலாகி வருகிறது. இத்தகைய குறைகளை சரி செய்து தர வேண்டும் என பாசன விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதுவரை சீரமைக்கவில்லை என விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.
எனவே, கண்மாயை முழு அளவில் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, நீர் வரத்து பாதைகளை சுத்தம் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, இடிந்த சமரணையை கட்டி தந்து மழை பெய்தால் எளிதில் தண்ணீர் வரும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என இந்த கண்மாய் பாசன விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.
தடுப்பணை கட்டவில்லை -காசி, விவசாயி: பெரியகுளம் கண்மாயிலிருந்து செங்குளம் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து பாதை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யவில்லை. கிளை சிறை அருகில் நடை மேம்பாலம் கட்டும்போது உடைக்கப்பட்ட தடுப்பணை பல ஆண்டுகளாகியும் இன்னும் கட்டி தரவில்லை. இதனால் தண்ணீர் சோழங்குளம் கண்மாய்க்கு செல்கிறது. நீர்வரத்து பாதையை சுத்தம் செய்வதிலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
கழிவுகளின் சங்கமம் சுந்தரம், விவசாயி: செங்குளம் கண்மாய் பல ஆண்டுகளாக தூர் வாரப் படவில்லை. கரைகள் பலப்படுத்தவில்லை. நீர்வரத்து பாதைகள் சுத்தம் செய்யப்படவில்லை. நகரின் ஒட்டுமொத்த கழிவு தான் கண்மாய்க்கு வருகிறது. கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளாக நீடிக்கும் இத்தகைய பிரச்னை களை சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே, காலம் தாழ்த்தாமல் கண்மாயை சீரமைக்க வேண்டும்.
நீர்வரத்து பாதைகளை சீரமைக்க வேண்டும் கோவிந்தராஜ், விவசாயி: நகரின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் மொட்ட பெத்தான் கண்மாய் வழியாக வடமலைகுறிச்சிக்கு வந்து பின்னர் செங்குளம் கண்மாய்க்கு செல்லும் வகையில் நீர் வரத்து ஓடைகள் உள்ளன. போதிய ஆழமும், அகல மும் உள்ள நீர்வரத்து ஓடைகள் தற்போது மண்மேவி அடைபட்டு கிடக்கிறது. எனவே, அனைத்து நீர்வரத்து பாதைகளையும் சீரமைக்க வேண்டும்.
