ADDED : ஏப் 06, 2026 05:22 PM
ராஜபாளையம்:ராஜபாளையம் சஞ்சீவி மலையில் மின்னல் வெட்டியதால் நேற்று முன் தினம் இரவு காட்டுத்தீ பற்றியது.
ராஜபாளையம் நகர் நடுவில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. கொத்தங்குளம் காப்புக்காடு என அழைக்கப்படும் இதில் 200க்கும் அதிகமான மூலிகைகள், தாவரங்கள் உள்ளது. மலையின் ஒரு பகுதியில் முருகன், சஞ்சீவி நாதர் கோயில் உள்ள நிலையில் இதன் அருகே ராமர் பாறை என அழைக்கப்படும் தேன் தட்டு பாறையின் அடியில் பழமையான பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே கார்பன் சமநிலை திட்டத்தில் ராஜபாளையம் சஞ்சீவி மலை காப்புக்காடுகளை பாதுகாத்து சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க திட்ட பணிகள் நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் இரவு மழையின் வடக்கு பகுதியில் உள்ள தீபத்துாண் அருகே உச்சியில் காட்டுத்தீ பரவியது தெரிந்தது. வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
வனத்துறையினர் கூறுகையில்: நேற்று முன்தினம் மாலை மேற்கு தொடர்ச்சி மலை , ராஜபாளையம் ஒட்டிய பகுதிகளில் இடி, மின்னல் ஏற்பட்டது. மின்னல் விழுந்ததில் தீப்பற்றி இருக்கலாம். வனத்துறையினரால் இரவே தீ கட்டுப்படுத்தப்பட்டது என்றனர்.
