/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பி, சகதியாகும் ரோடு
/
தாழ்வாக செல்லும் மின்கம்பி, சகதியாகும் ரோடு
ADDED : மே 23, 2025 12:00 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே என்.ஜி.ஓ., காலனி தெருக்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாலும், மழைக்காலங்களில் ரோடு சகதியாக மாறி விடுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆத்திப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது என்.ஜி.ஓ.,காலனி. புறநகர் பகுதியாக இருப்பதால் இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. மெயின் தெருவில் மின் கம்பங்களில் இருந்து செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் கனரக வாகனங்கள் செல்லும்போது உரசுகிறது. தெருக்களில் வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான பொருட்கள் கொண்டு வர லாரிகள் பயப்படுகின்றன. பலத்த காற்றிக்கு மின் கம்பிகள் ஆடுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். மின் கம்பிகளை உயர்த்தி கட்ட பலமுறை மின்வாரியத்திற்கும் ஊராட்சிக்கும் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை.
தெருக்களில் உள்ள மின்கம்பங்களும் காரைகள் பெயர்ந்து எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. இன்றைய சூழலில் மழை பெய்வதற்கு முன்பு சூறாவளிக்காற்று பயங்கரமாக அடிக்கிறது. இதனால் மின் கம்பங்கள் விழுந்துவிடும் அபாயத்தில் உள்ளது. மாங்கனி வீதியிலும் மின் கம்பம் சேதம் அடைந்து உள்ளது. மின்வாரியத்தினர் புதிய மின் கம்பங்களை அமைத்தும் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருக்களில் வாறுகால் வசதி இல்லை. பல தெருக்களில் மெட்டல் ரோடுகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன. தார் ரோடு அல்லது பேவர்பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். தாமிரபரணி குடிநீர் இங்கு வருவது இல்லை. ஊராட்சி வழங்கும் குடிநீரை தான் பயன்படுத்துகின்றனர். பொது கழிப்பறைகள், நவீன சுகாதார வளாகங்கள் இல்லை. பூங்கா இல்லை. தேவையான இடங்கள் இருந்தும் கட்டப்படாமல் உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து 30 அடி உள்ள தென் வடல் வீதி முட்புதர்கள் முளைத்து குப்பைகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது.
ஊராட்சி இந்த இடத்தை சுத்தம் செய்து ரோடு அமைத்தால் இப்பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும். தெருக்களில் பல பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளது இவற்றையும் அகற்ற ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். காலனி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க ஆத்தி பட்டிக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் பெண்கள் சிரமப்படுகின்றனர் இங்கு பகுதி நேர ரேஷன் கடை அல்லது மொபைல் ரேஷன் கடை செயல்படுத்த வேண்டும்.
தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்
பரணிராஜ், மில் தொழிலாளி: என்.ஜி.ஓ., காலனி மெயின் தெருவில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. காற்றுக்கு ஆடுவதால் வீடுகளில் உரசி விடுமோ என்று பீதியில் மக்கள் உள்ளனர். மின்வாரியத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. மின் கம்பிகளை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சகதியாக மாறும் ரோடு
பெத்த பெருமாள், மில் தொழிலாளி: என்.ஜி.ஓ., காலனி தெருக்களில் மெட்டல் ரோடு தான் போடப்பட்டுள்ளது. இவற்றிற்கு தார் ரோடு அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மெட்டல் ரோடு சேதம் அடைந்துவிடும் நிலையில் உள்ளது. அதற்குள் தார் ரோடு அமைக்க வேண்டும். வாறுகால்களும் தெருக்களில் அமைக்கப்பட வேண்டும்.
வளர்ச்சிப் பணிகள் தேவை
சண்முகவேலு, வக்கீல்: என்.ஜி.ஓ., காலனி உருவாகி பல ஆண்டுகள் ஆனபோதிலும் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. ரோடுகள், வாறு கால்கள், பொது கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட வேண்டும். ஊராட்சியில் தேவையான இடங்கள் இருந்தும் கட்டப்படாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.