உயரம் குறைவான கல்குவாரி தடுப்புச்சுவரால் விபத்து அபாயம்
உயரம் குறைவான கல்குவாரி தடுப்புச்சுவரால் விபத்து அபாயம்
ADDED : ஜன 28, 2026 05:53 AM

சாத்துார்: சாத்துார் ஏழாயிரம் பண்ணை கீழச் செல்லையாபுரம் விலக்கு ரோட்டில் கல்குவாரிகளின் உயரம் மிக குறைவான சாலையோர தடுப்புச் சுவரால் நாளுக்கு நாள் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.
சாத்துார் ஏழாயிரம் பண்ணை வழியாக சங்கரன்கோவில்,கழுகுமலைக்கு பல அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் சென்று வருகின்றன.
மேலும் இந்தப் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைக்கும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகிறது.
இங்கு சாலை ஓரம் உள்ள கல் குவாரிகளின் தடுப்புச் சுவரின் உயரம் குறைவாக உள்ளதால் நாளுக்கு நாள் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.
கீழச் செல்லையாபுரம் பகுதியில்சாலை ஓரத்தில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.பல ஆண்டுகளுக்கு முன்பு கற்கள் எடுக்கப்பட்ட கல் குவாரிகளில் தற்போது மழை நீர் தேங்கியுள்ளது.
சுற்று கிராமங்களில் வசிக்கும் மக்களும் கல்குவாரியில் உள்ள தண்ணீரில் துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கல்குவாரி பகுதி அருகில் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி கல்குவாரி பள்ளத்தில் விழுந்து விடுவதை தடுப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினரால் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் உயரம் மிகக் குறைவாக உள்ளது.
இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சாலையின் உயரமும் அதிகரித்து வரும் நிலையில் கல்குவாரிக்குள் வாகனங்கள் விழுந்து விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கு அங்கு கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும்.
இதன் மூலம் இப்பகுதியில் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
