ADDED : ஏப் 11, 2025 04:29 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வடுகர்கோட்டையில் பல ஆண்டுகளாக தாழ்வாகவும், பள்ளமாகவும் சேதமடைந்து இருப்பதாலும், ரோடு பள்ளமாகி நடக்க முடியாமல் இருப்பதாலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 34 வது வார்டை சேர்ந்தது வடுகர்கோட்டை. இங்கு வீரப்பா தெரு, பெருமாள் தெரு என 5 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. தெருக்கள் அனைத்தும் குறுகலாக உள்ளது. இவற்றில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளத்தில் வாறுகால் அமைக்கப்பட்டது. ரோட்டில் இருந்து 3 அடி ஆழத்தில் உள்ளது. வாறுகால் இருபுறமும் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் தரம் இல்லாத பணியால் ஆங்காங்கு விரிசல் கண்டு உள்ளே விழுந்து விட்டது.
இதனால் கழிவு நீர் வெளியேற முடியாத நிலையில் இருக்கிறது. கழிவு நீர் தேங்கியே இருப்பதால் துர்நாற்றம், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கொசுக்களின் கேந்திரமாகவும் உள்ளது. வாறுகால் கழிவுநீர் சீராக வெளியேற முடியவில்லை. இதேபோன்று தெருக்களில் அமைக்கப்பட்ட சிமெண்ட் ரோடுகளும் ஆங்காங்கு பெயர்ந்து கிடங்காக மாறிவிட்டது. வாகனங்களில் சென்றால் ரோடு தடதடக்கிறது. இதனால் டூவீலர்களின் செல்ல மக்கள் பயப்படுகின்றனர். வீரப்பன் தெருவில் ரோடு பல இடங்களில் விரிசல் கண்டுள்ளது.
தெருவில் வயதானவர்கள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் தடுக்கி விழுகின்றனர். நகராட்சி பொது அடிகுழாய் பழுதாகி பல ஆண்டுகளாக காட்சி பொருளாக உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து தெருவிற்குள் நுழையும் பகுதியில் மேடாக இருப்பதால் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது.
தெருக்களில் அமைக்கப்பட்ட எல்.இ.டி., மின் விளக்குகளில் வெளிச்சம் இல்லை. இதேபோன்று வடுகர்கோட்டை பகுதி வழியாக செல்லும் பந்தல்குடி மெயின் ரோட்டில் போதுமான தெரு விளக்குகள் இல்லை. இருக்கின்ற மின் விளக்குகளிலும் வெளிச்சம் குறைவாக வருகிறது.
புதிய வாறுகால் தேவை
நிர்மலா, குடும்பதலைவி: வடுகர் கோட்டை பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வாறுகால்கள் சேதம் அடைந்து கழிவுநீர் சீராக வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. அதிக ஆழத்தில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. பழைய வாறுகால்களை இடித்து விட்டு அகலமாக புதியதாக கழிவுநீர் செல்லும் வகையில் வாறுகால்கள் அமைக்க வேண்டும்.
பள்ளமான ரோடு
ரஞ்சனி, குடும்ப தலைவி:வடுகர் கோட்டையில் உள்ள தெருக்களில் சிமெண்ட் ரோடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது அனைத்து தெருக்களிலும் பல பகுதிகளில் கிடங்காக உள்ளது. டூவீலர்களில் சென்றால் ரோடு அதிர்கிறது. இரவு நேரங்களில் வயதானவர்கள் தடுக்கி விழுகின்றனர். நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பழைய ரோட்டை பெயர்த்து விட்டு புதியதாக ரோடு அமைக்க வேண்டும்.
உயரமான சிறுபாலங்கள்
ராம்சங்கர், ஆசிரியர்: மெயின் ரோட்டில் இருந்து வடுகர்கோட்டைக்குள் உள்ள தெருக்களின் நுழையும் பகுதியில் அமைக்கப்பட்ட சிறு பாலங்கள் உயரமாக இருப்பதால் வாகனங்கள் சிரமப்படுகின்றன. பால உயரத்திற்கு தெருவில் உள்ள ரோட்டையும் உயர்த்தி புதியதாக அமைக்க வேண்டும். எங்கள் பகுதியில் ரோடு, வாறுகால் அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

