ADDED : டிச 13, 2025 06:00 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: சபரிமலை சீசன் எதிரொலியாக கேரள வனப்பகுதிகளில் சுற்றித்திரிந்த யானைகள் கூட்டம் தற்போது ஸ்ரீவில்லிபுத்துார் புலிகள் காப்பக மலைப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதால் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சபரிமலை மண்டல பூஜை சீசனையொட்டி தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
இதனால் சபரிமலை அமைந்துள்ள மலைத்தொடரின் மற்றொரு பகுதியான ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக அடர் வனப் பகுதிகளுக்கு, கேரள யானைகள் கடந்த சில நாட்களாக இடம் பெயர்ந்து வருகின்றன.இதனை வனப்பகுதியில் ரோந்து செல்லும் வனத் துறையினர் கண்டறிந்து கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லி புத்துார் புலிகள் காப்பக மலைப்பகுதியில் நடமாடிய யானைகள் தற்போது மலையடிவாரத்தில் திருவண்ணாமலை பந்த பாறை, செண்பகத்தோப்பு, தாணிப்பாறை, அத்தி கோயில் பகுதிகளில் மாலை நேரங்களில் புகுந்து விளை பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
