/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவின் திட்ட அலுவலக பணிகள் நிறைவு
/
மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவின் திட்ட அலுவலக பணிகள் நிறைவு
மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவின் திட்ட அலுவலக பணிகள் நிறைவு
மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவின் திட்ட அலுவலக பணிகள் நிறைவு
ADDED : பிப் 11, 2025 04:49 AM

விருதுதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் 51 சதவீத நிதி பங்களிப்பு, மாநில அரசின் 49 சதவீத நிதி பங்களிப்பில் 1052 ஏக்கரில் சிப்காட் நிலத்தில் ஒருங்கிணைந்த பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கான இ.குமாரலிங்கபுரம் வரையிலான ரோடு விரிவாக்க பணி முடிந்து, திட்ட அலுவலகம் கட்டுமான முழுமை அடைந்துள்ளது.
இந்தியா முழுவதும் தமிழகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பி.எம்., மித்ரா ஜவுளி பூங்கா இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் நிலத்தில் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ரூ.2 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்துகிறது. இதில் 51 சதவீதம் மத்திய அரசும், 49 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இ.குமாரலிங்கபுரத்தை மையமாக கொண்டு அருகில் உள்ள அச்சம்பட்டி, கோவில்புலிக்குத்தி கிராமங்கள் வரை இந்த ஜவுளி பூங்கா பெரிய அளவில் அமைகிறது. 2 லட்சம் பேர் வேலை பெற உள்ளனர்.
ஒரு துணியின் துவக்கம் முதல் இறுதி வரை என்னென்ன தொழில் செய்யப்படுகின்றனவோ அதற்கான ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இடம்பெற உள்ளன. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் செய்யப்பட உள்ளன. ஒரு ஏக்கரில் சிப்காட் அலுவலகம் அமைய உள்ளது.
இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் இருந்து குமாரலிங்கபுரத்திற்கு செல்லும் ரோடு 30 மீட்டர் அகலத்திற்கு மாநில நெடுஞ்சாலைத்துறையால் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. 5 பாலங்கள் அமைகின்றன. 1.8 கி.மீ., வரை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. சிப்காட் திட்ட அலுவலகம் கட்டும் பணியும் முழுமை அடைந்துள்ளது. அடுத்த கட்டமாக உள்ளவட்ட ரோடுகள் அமைக்கப்பட உள்ளது.
விரைவில் ஆலைகளின் கட்டுமான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 11 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் முதல் கட்டத்தில் அமைய உள்ள ஆலைகள் மூலம் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரை பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்.

