/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விபத்து பகுதியாக மாறிய புல்லலக்கோட்டை ரோடு வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிப்பு
/
விபத்து பகுதியாக மாறிய புல்லலக்கோட்டை ரோடு வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிப்பு
விபத்து பகுதியாக மாறிய புல்லலக்கோட்டை ரோடு வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிப்பு
விபத்து பகுதியாக மாறிய புல்லலக்கோட்டை ரோடு வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிப்பு
UPDATED : டிச 04, 2025 04:34 AM
ADDED : டிச 04, 2025 04:23 AM

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியின் புல்லலக்கோட்டை ரோடு முழுவதும் பேவர் பிளாக் கற்கள் சேதமாகியுள்ளது. பாதாளச்சாக்கடை மேன்ஹோல்கள் இருக்கும் இடங்கள் அனைத்தும் பள்ளங்களாக இருப்பதால் வாகன ஓட்டிகள் உயிர் பயத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
விருதுநகரில் இருந்து வி.எம்.சி., காலனி வழியாக புல்லலக்கோட்டை செல்வதற்காக இருந்த ரோடு அடிக்கடி சேதமானதால் நகராட்சியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு புதிதாக ரோடு அமைக்கப்பட்டது. எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. ஆனால் பேவர் பிளாக் கற்கள் ரோடுகள் என்பதால் மழைக்காலங்களில் டூவீலர்களில் டயர்கள் பிரேக் பிடிக்கும் போது நழுவி விடுவதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படும் பகுதியாக மாறியுள்ளது.
மேலும் நகராட்சி நிர்வாகத்தால் முறையாக அமைக்கப்படாத பாதாளச்சாக்கடை திட்டத்தால் ஒவ்வொரு முறையும் மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஆறாக ஓடுகிறது. மேன்ஹோல் சுற்றி பள்ளங்களாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இந்த பள்ளங்களில் கழிவு நீர், மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தினமும் அவ்வழியாக செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.
பள்ளங்களாக உள்ள ரோட்டை கடந்து செல்லும் போது விபத்து, முதுகு வலி உள்பட பல்வேறு பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த ரோட்டில் உள்ள பள்ளங்களில் அப்பகுதியில் மண்ணை கொட்டி தற்காலிக சீரமைப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். சீரமைப்பு பணிகள் செய்வதற்கு கூட நகராட்சி நிர்வாகம் தயராக இல்லை.
நகரின் பல பகுதிகளில் தற்போது சிறு பாலம், தரைப்பாலம் கட்டும் பணிகள் நடப்பதால் மாற்றுப்பாதையில் மாற்றி விடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அல்லல்படுகின்றனர். மாவட்ட தலைநகருக்கு தகுதியில்லாத நகராட்சி என அனைத்து மக்களும் குற்றம்சாட்டும் நிலைக்கு உருவாகியுள்ளது.
பேவர் பிளாக் ரோடால் சிரமம்
![]() |
விருதுநகரில் இருந்து புல்லலக்கோட்டை செல்லும் ரோட்டில் பேவர் பிளாக் கற்கள் அமைக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் பிரேக் பிடிக்கும் போது டயர்களுக்கு போதிய பிடிப்பு தன்மை இல்லாததால் விபத்துக்கள் நடப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- பாலமுருகன், ரியல் எஸ்டேட், விருதுநகர்.
பள்ளங்களால் அவதி
![]() |
குடியிருப்பு பகுதிகள் அதிகமாக இருந்தும் தார் ரோடாக அமைக்காமல் பேவர் பிளாக்
கற்களை ரோட்டில் பதித்தனர். இதனால் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே மக்கள் யாராவது சென்று விட்டால் விபத்து சர்வசாதாரணமாக நடக்கிறது. இந்த ரோட்டில் அதிகமாக இருக்கும் பள்ளங்களை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
- சீனிவாசன், தனியார் ஊழியர், விருதுநகர்.
விரைவில் சீரமைப்பு பணிகள்
விருதுநகரில் இருந்து புல்லலக்கோட்டை செல்லும் பேவர் பிளாக் கற்கள் ரோடுகளில் உள்ள பள்ளங்கள், இடர்பாடுகளை சீரமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும்.
- ஆர்.மாதவன், நகராட்சி தலைவர், விருதுநகர்.



