விருதுநகர் மாவட்டத்தில் 52 ஆயிரம் எக்டேருக்கு சிறுதானிய பயிர்களான சோளம், கம்பு, திணை, குதிரைவாலி போன்றவை பயிரிடப்படுகின்றன.
பெரும்பாலும் இதில் சோளம் தான் அதிக பரப்பில் பயிரிடப்படுகிறது. மற்ற பயிர்களான கம்பு, திணை, குதிரைவாலி குறைந்த அளவில் தான் பயிரிடப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் சிறுதானிய பரப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. சோளத்தை காட்டிலும் மற்ற பயிர்களையும் அதிகம் விளைவிக்க வேண்டும் என்றும், அதற்கான மதிப்பு கூட்டு பொருட்களை செய்ய தாலுகா வாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி ஒன்றியத்தில் கள்ளிப்பட்டியில் சோலார் மூலம் சிறுதானியங்களை மாவாக அரைத்து பொட்டலமிட்டு உற்பத்தி செய்கின்றனர். இதில் மகளிர் சுய உதவிக்குழுவினரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
மாவட்ட வேளாண்துறை அருப்புக்கோட்டை, சாத்துார், திருச்சுழி எம்.ரெட்டியபட்டி, வெம்பக்கோட்டை பகுதிகளில் சிறுதானியங்களை அதிகளவில் வளர்க்க முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து சாகுபடி நடப்பதற்கு சிறுதானியத்தை சிவகாசி கள்ளிப்பட்டியில் செய்வது போன்று மதிப்பு கூட்டி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில மாதங்கள் முன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ரேஷனில் சிறுதானியங்களை விற்றால் விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அதற்கும் அரசு தெளிவான பதில் கூறவில்லை.
இருப்பினும் ஒரே தீர்வாக, தற்போதுள்ள வாழ்வியல் முறைக்கு நோய் தீர்க்கும் மருந்தாக உள்ள சிறுதானியங்களை அதிகளவில் விளைவிக்க, அவற்றை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். மேலும் தொடர்ச்சியாக சாகுபடி பரப்பையும் அதிகரிக்க செய்யும்.