ADDED : மார் 10, 2011 02:53 AM
சாத்தூர் சட்டசபை தொகுதியில் 87 ஆயிரத்து 148 ஆண்கள், 89 ஆயிரத்து 755 பெண்கள் என ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 903 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளடக்கிய இத்தொகுதியில் 1957, 1962ல் காமராஜர் வெற்றி பெற்றார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இங்கு ஆறு முறை வெற்றி பெற்றார். கடந்த 2006 தேர்தல் வரை இத்தொகுதி எண் 205 ஆக இருந்தது. இப்போது 204 ஆக மாறி உள்ளது.புதியதாக வரையறுக்கப்பட்டதில் சாத்தூர் தொகுதியில் சாத்தூர் நகராட்சியும், சாத்தூர் தாலுகா, சிவகாசி தாலுகா, ராஜபாளையம் தாலுகா, ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகாக்கள் உள்ளடக்கி வரையறுக்கப்பட்டுள்ளது.புதிதாய் சேர்ந்தவை: ஏழாயிரம் பண்ணை பிர்கா, சாத்தூர் பிர்கா, ஸ்ரீவில்லிப்புத்தூரில் கொங்கலாபுரம் ஊராட்சி, சிவகாசி தாலுகாவில் வெம்பக்கோட்டை யூனியன், ராஜபாளையம் தாலுகாவில் இருந்தும் கிராமங்கள் சாத்தூர் தொகுதியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
சிவகாசி தொகுதியில் இருந்து வல்லம்பட்டி, பணையடிபட்டி, ஏழாயிரம் பண்ணை, சிப்பிப்பாறை, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, ஆலங்குளம், முறம்பு, அனுப்பங்குளம், கீழான்மறை நாடு, சங்கரபாண்டியாபுரம், கீழ ராஜகுல ராமன், கல்லமநாயக்கன்பட்டி, விஜயகரிசல்குளம், எதிர்க்கோட்டை, ஆலங்குளம், எஸ்.ராமலிங்காபுரம், சோலாபுரம், கொங்கலாபுரம் சாத்தூர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளன.பிரிந்து சென்றவை: அருப்புக்கோட்டை டவுன், நல்லி, இருக்கன்குடி, நென்மேனி, உப்பத்தூர், அணைக்கரைபட்டி, முள்ளிச்செவல், தோட்டிலோவன் பட்டி, உப்பத்தூர், சின்னஒடைப்பட்டி, பெத்துரெட்டிபட்டி, கஞ்சம்பட்டி, பேரையம்பட்டி உள்பட பல கிராமங்கள் சாத்தூர் தொகுதியில் இருந்து பிரித்து அருப்புக்கோட்டை தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.தொகுதி இயல்பு: விவசாயம் மற்றும் பட்டாசு ஆலை, தீப்பெட்டி ஆலைகளும், தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். கத்திமுனையை விட பேனா முனைக்கே வலிமை உள்ளது என்பதற்கு ஏற்ப இத்தொகுதி ஒரு காலத்தில், பேனா நிப் தயாரிப்பிற்கு பெயர் போனதாக இருந்தது. பால் பா#ன்ட் பேனா வரத்திற்கு இதன் பின் இத்தொழிலின் முனை மழுங்கி கிடக்கிறது. சிமென்ட் ஆலை தவிர பெரிதாக தொழில் வளர்ச்சி இல்லை. வானம் பார்த்த பூமிகளே அதிகம். தற்போது சிறிய அளவில் மட்டும் இத்தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த 20 ஆண்டுகளில் சாத்தூர் நகரம் அடைந்த அளவிற்கு கிராமங்கள் வளர்ச்சி அடையவில்லை.
இருப்பினும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் முன்பிருந்ததை விட சற்று முன்னேற்றம் உள்ளது.வெம்பக்கோட்டை அணை ஒன்றே சுற்றுலா பகுதியாக உள்ளது.
தீராத பிரச்னை: போக்குவரத்து நெருக்கடி, புது பஸ் ஸ்டாண்ட் அமைக்காதது, அனைத்து பகுதிகளுக்கும் பாதாளசாக்கடை வசதி, கிராமங்களில் ரோடு வசதி, வாறுகால் வசதி, கழிப்பிட வசதி, தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நீண்ட நாள் கோரிக்கையான இன்ஜினியரிங், அரசு கலைக்கல்லூரிகள் இல்லாதது, அடிக்கடி நடக்கும் தீவிபத்தில் பாதிக்கப்படுவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க போதிய வசதியில்லாத அரசு ஆஸ்பத்திரி என பெரிய லிஸ்ட் உள்ளது.ஆளும்கட்சி அறிவித்த சிறப்பு பொருளாதார மண்டலமும் கானல்நீராகிவிட்டது. வைப்பாற்றில் மணல் திருட்டால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.என்ன செய்ய வேண்டும் புது எம்.எல்.ஏ.,: அரசு சார்பில் கல்வி நிறுவனங்கள், விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் வசதிக்கு கண்மாய்களை தூர் வார நடவடிக்கை எடுப்பது உட்பட தீராத பிரச்னைகளை தீர்க்க புது எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நமது சிறப்பு நிருபர்-
