/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., புலிகள் காப்பகத்தில் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நிறைவு
/
ஸ்ரீவி., புலிகள் காப்பகத்தில் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நிறைவு
ஸ்ரீவி., புலிகள் காப்பகத்தில் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நிறைவு
ஸ்ரீவி., புலிகள் காப்பகத்தில் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நிறைவு
ADDED : ஏப் 28, 2025 05:27 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: - ஸ்ரீவில்லிபுத்துார் புலிகள் காப்பகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் 4 வனச்சரகங்களில் நடந்த நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டம் 2022ல் துவக்கப்பட்டது. இதன்படி வரையாடுகளின் எண்ணிக்கையை அறிவது, அதன் வாழ்விடங்களை பாதுகாப்பது உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக கடந்தாண்டு முதல் முறையாக தமிழக, கேரளா வனப்பகுதிகளில் இரு மாநில வனத்துறையினர் இணைந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் முடிவில் தமிழகத்தில் 1031 வரையாடுகள் இருப்பதும், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட முக்கூர்த்தி தேசிய பூங்காவிலும், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்திலும் அதிகளவில் வரையாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த ஆண்டு ஏப்ரல் 24 முதல் 27 ஆம் தேதி வரை வரையாடுகள் கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் 176 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாப்டுர் ஆகிய நான்கு வனச்ச ரகங்களில் 28 இடங்களில் ஏப்ரல் 24 முதல் நீலகிரி வரை ஆடுகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
நவீன கேமராக்கள் மூலம் வரையாடுகளின் நடமாட்டம், இடப்பெயர்வு, காலடி தடங்கள் உட்பட பல்வேறு தரவுகளை வனத்துறையினர் நேற்று மாலை வரை சேகரித்தனர். பின்னர் சேகரிக்கப்பட்ட தரவுகளை கோவையில் உள்ள நீலகிரி வரையாடுகள் சிறப்பு திட்ட அலுவலகத்திற்கு அனுப்புகின்றனர். அங்கு நடக்கும் ஆய்விற்கு பிறகு வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பது குறித்து தெரிய வருமென வனத்துறையினர் தெரிவித்தனர்.