ADDED : செப் 08, 2026 04:03 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் காமராஜர் நகர் மெயின் ரோட்டை ஆக்கிரமித்திருக்கும் ரோட்டோர மீன் கடைகளால் போக்குவரத்து பாதிப்புடன் சுகாதாரக் கேடு தொடர்வதை அடுத்து பஸ் ஸ்டாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கடைகளை திறக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
டி.பி மில்ஸ் ரோட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டிற்கான சீனியப்ப நாடார் மெயின் தெருவில் இரண்டு பக்கமும் ரோட்டோர மீன் கடைகள் தொடர் ஆக்கிரமிப்பில் இருந்து வருகின்றன. அதிகாலையில் கடை விரித்து மதியம் வரை ஆக்கிரமிப்பு நீடிக்கிறது. இவற்றின் கழிவுகள் முறையாக அகற்றாமல் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், பஸ்கள் செல்வதற்கு இடையூறாக ரோட்டோர மீன் கடை ஆக்கிரமிப்புகளால் விபத்து ஏற்பட்டு வந்தது.
நீண்ட காலம் தொடரும் இப்ப பிரச்சனைக்கு தீர்வாக பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் தனியாக இடம் ஒதுக்கி 15-க்கும் அதிகமான கடைகள் அமைத்து தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திறக்கப்பட்டது.
இருப்பினும் தற்போது வரை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யாததால் ரோட்டிலேயே கடையை வைத்துள்ளனர். கட்டடங்கள் ஒதுக்கியும் திறக்கப்படாமல் உள்ளது குறித்து நகராட்சி அதிகாரிகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
