ADDED : மார் 06, 2024 05:32 AM
அருப்புக்கோட்டை : பழைய பூங்காக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காமல் புதியதாக பூங்காங்கள் திறப்பதில் ஆர்வம் காட்டும் நகராட்சியால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை நகர மக்கள் பொழுதுபோக்கிற்காகவும், நடை பயணம் மேற்கொள்ளவும் நகரின் பல பகுதிகளில் நகராட்சி மூலம் ஐந்துக்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பூங்காக்களுக்கும் தலா 25 லட்சம் நிதியில் இருக்கை வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை உட்பட பல வசதிகள் செய்யப்பட்டன. ஒரு சில பூங்காக்களை தவிர மற்றவை எதுவும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. பயன்பாட்டிற்கு வந்த பூங்காக்களும் பராமரிப்பு இன்றி பாழடைந்து முப்புதர்கள் சூழ்ந்து பயனற்று கிடக்கின்றது.
நகராட்சி பூங்காக்களுக்கு முறையாக பராமரிக்க பணியாளர்களை நியமனம் செய்வது இல்லை. இவற்றை பராமரிப்பதும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வராமலேயே பாழடைந்து கிடக்கின்றன.
இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை விட்டுவிட்டு, நேற்று முன்தினம் நேதாஜி ரோட்டில் 50 லட்சம் மதிப்பில் ஒரு பூங்காவும், சாய்பாபா நகரில் 34 லட்சம் மதிப்பில் ஒரு பூங்காவையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
இருக்கின்ற பூங்காக்களை பராமரிப்பு செய்யாமல் மூடுவிழா கண்ட நிலையில், புதியதாக பூங்காக்களுக்கு திறப்பு விழா கண்டு என்ன பயன் என, மக்கள் நொந்து கொள்கின்றனர்.

