/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரு அலுவலகத்திற்கு ஒரு போக்குவரத்து ஆய்வாளர்
/
இரு அலுவலகத்திற்கு ஒரு போக்குவரத்து ஆய்வாளர்
ADDED : மார் 28, 2025 05:46 AM
ஸ்ரீவில்லிபுத்துார் ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமை அலுவலகம், ராஜபாளையம் பகுதி அலுவலகம் ஆகிய 2 அலுவலகத்திற்கு ஒரே ஒரு போக்குவரத்து ஆய்வாளர் மட்டுமே பணியில் இருப்பதால் வாகனங்களுக்கு தகுதி சான்று, விபத்தில் சிக்கிய வாகனங்களுக்கு சான்று, ஓட்டுநர் உரிமம் போன்றவை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன உரிமையாளர்களும், போலீசாரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
போக்குவரத்து துறையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் தலைமை அலுவலகமும், ராஜபாளையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகனங்களுக்கு தகுதி சான்று, டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கும் வாகனங்களை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் போலீசார் மோட்டார் வாகன ஆய்வாளரின் ஆய்விற்கு பிறகு அதனை வாகன உரிமையாளர்களிடம் திரும்ப வழங்குகின்றனர்.
இதற்காக போக்குவரத்து அலுவலர் அலுவலகம் ஸ்ரீவில்லிபுத்துாரில் மதுரை ரோட்டில் செயல்பட்டு வந்த நிலையில் ராஜபாளையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் தனியாக துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிய பூர்ணகலா பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ராஜபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் செண்பகவல்லி ஸ்ரீவில்லிபுத்துார் அலுவலகப் பொறுப்பையும் சேர்த்து கவனித்து வந்தார்.
ஒரு நாள் ராஜபாளையத்திலும், மறுநாள் ஸ்ரீவில்லிபுத்துாரிலும் அவர் பணியாற்றி வந்ததால், பணிகள் பாதிக்கப்பட்டது. உரிய காலத்தில் வாகனங்களுக்கு தகுதி சான்று பெற முடியாமல் வாகன உரிமையாளர்கள் தவித்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவரும் விடுமுறையில் சென்றதால் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் அலுவலகங்களில் வாகனங்கள் தேங்கியது. தனியார் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்தவர்களும், பல்வேறு ஸ்டேஷன்களை சேர்ந்த போலீசாரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
எனவே, ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு என தனியாக ஒரு மோட்டார் வாகன ஆய்வாளரை உடனடியாக நியமனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.