ADDED : செப் 25, 2026 04:15 AM
வத்திராயிருப்பு: கண்மாய்கள், குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் நிலையில் வட கிழக்கு பருவ மழையை நம்பி நெல் சாகுபடி பணிகளில் வத்திராயிருப்பு விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வத்திராயிருப்பு தாலுகாவில் கான்சாபுரம், கொடிக்குளம், கூமாபட்டி, நெடுங்குளம், சேது நாராயணபுரம், வத்திராயிருப்பு, புதுப்பட்டி, தம்பி பட்டி, மகாராஜபுரம், தாணிப்பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அனைத்து கண்மாயிலும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் நிலையில் கிணறுகளிலும் ஓரளவிற்கு தான் தண்ணீர் உள்ளது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் ஏமாற்றிய நிலையிலும் வடகிழக்கு பருவமழை போதிய அளவிற்கு பெய்யும் என்ற நம்பிக்கையில் தற்போது விவசாயிகள் நெல் சாகுபடிக்கு நாற்றுகளை நடும்பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து வத்திராயிருப்பு விவசாயிகள் கூறியதாவது, நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவிற்கு பெய்யாமல் கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. குடிநீர் தேவைக்கு மக்கள் மட்டுமின்றி வனவிலங்குகள் கூட தவிக்கும் நிலை உள்ளது. கடந்த சில நாட்கள் பெய்த மழை, மலையடிவாரப் பகுதி நீர் ஆதாரத்தை வலுப்படுத்தும். தற்போது தங்கள் வயல்களின் கிணறுகளின் தண்ணீரை நம்பி நெல் சாகுபடி பணிகளை துவக்கி உள்ளோம். வடகிழக்கு பருவமழை போதிய அளவிற்கு பெய்து நல்ல மகசூலை தரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம், என்றனர்.
